பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

சேகனாப் புலவர் சாந்துக்கார சம்சுத்தீனை அச்சுறுத்தினாரே தவிர அவருடைய பதிப்புதான் இன்றுள்ள எல்லாச் சீறாப் பதிப்புகளுக்கும் முன்னோடி என்பதில் ஐயமில்லை. எல்லாச் சீறாப் பதிப்புகளிலும் செய்கப்துல் காதிர் நயினார் பரிசோதித்து அவர்களாலும் உவைசு நயினார் லெப்பை அவர்களாலும் முன் செய்வித்த பதிப்புக்கிணங்கத் தாங்கள் அச்சிடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

1852 பதிப்பு

இதனையடுத்து பார்வைக்குக் கிடைத்தது யாழ்ப்பாணம், பரிகாரி பகீர் முகியித்தீன் அவர்களால் பார்வையிடப்பட்டு கும்முடிபூண்டி குள்ளப்ப செட்டியார் குமாரர் நாகப்ப செட்டியாரவர்கள் முயற்சியால் சைதாப்பேட்டை வீரப்பத்திர செட்டியாரவர்களது லக்ஷ்மி விலாச அச்சுக் கூடத்தில் 1852இல் பதிப்பிக்கப்பெற்ற பதிப்பாகும்.

1857 பதிப்பு

தஞ்சை நகரத்தைச் சார்ந்த நத்தர்சாகிபு அவர்கள் குமாரர் உசேன் சாகிபு அவர்கள் சீறாவை இருமுறை பதிப்பித்திருப்பாரென்று தெரிகிறது. இரண்டாம் பதிப்பு சிந்தாதிரிப் பேட்டை சி. கேசவ முதலியாரவர்களது பிரபாகர அச்சுக்கூடத்தில் 1857இல் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

1884 பதிப்பு

அடுத்து 1884இல் நாகூரைச் சார்ந்த முத்தமிழ்க் கவி முகம்மது உசேன் புலவர் அவர்கள் சீறாவைப் பார்வையிட்டுத் திருவெற்றியூர் பரசுராம முதலியாரின் பரப்பிரம முத்திராசாலையில் பதிப்பித்துள்ளார். அவர் தாம் அதனைக் குலசேகரப்பட்டணம் சர்க்கரை சாகிபுத் தம்பியவர்கள் குமாரராகிய அல்லாபிச்சைப்புலவர் அவர்கள் பரிசோதித்த படி அச்சிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அல்லாப் பிச்சைப் புலவரின் பதிப்பு எப்போது வெளிவந்தது என்பது தெரியவில்லை.