பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

391

உறைச் சிறப்பு

மூலநூலின் சிறப்பை எடுத்துக் கூறுவது உரை நூலாகும். உரையாசிரியர் மூலநூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து கொள்ளாது தம் மனம்போல் பொருள் விரித்துரைக்கும் உரையாசிரியர்கள் பலருளர். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்ப்பது அல்லது மொழியாக்கம் செய்வது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் உரையெழுதுவதும் ஆகும். ஆங்கிலத்தில் ஒரு மரபுரை உண்டு “மொழிபெயர்ப்பாளன் ஒரு துரோகி, காட்டிக் சொடுப்பவன். தவறான உரையெழுதுபவனும் அந்த இனத்தைச் சார்ந்தவன்தான்” என்பதாகும் அது.

உரையாசிரியன் நூலாசிரியன் காணாத பொருளைக் கூடக் காட்டுவதுபோல் பொருள் காண்பதுதான் தனிச்சிறப்பு. ஆனால் அவ்வாறு காண்பது நூலாசிரியனுக்கு ஏற்றம் தருவதாய் இருக்கவேண்டும். திருக்குறளுக்கு எவ்வளவு பேர் உரையெழுதியிருப்பினும் பரிமேலழகர் உரையே தெள்ளு தமிழ் உரையாகப் போற்றப்பெறுகின்றது. ‘கற்கக் கசடறக் கற்க’ என்ற குறளில் ‘பின்’ எனப் பிரித்துப் படித்து ‘பின்பு’ என்றே உரையெழுதியுள்ளார். 'கல்லாதது உலகளவு' என்று வரையறுத்தபின், படித்தபின் ஒருவன் அதற்குத்தக நடக்கிறேன்' என்று கூறுவானாயின் எவ்வளவு பொருத்த மற்றுக் காணப்படுகிறது.

பரிமேலழகர் ‘கற்றபின்’ என்பதை ஒரே தொடராகக் கொண்டு 'கற்றல்' என்று பொருள் கூறுகிறார். ஒருவன் ஒன்றைப் படித்தால் படித்தவுடனேயே அதன் வழி நடக்க வேண்டும். படித்தபின்' என்று பின் நிகழ்வு வினையாகக் கொள்வது ‘படித்தால்’ என்று படித்தலையும் நடத்தலையும் உடன் நிகழ்வு வினையாகக் கொண்டுள்ள பரிமேலழகர் உரைத்திறன் உணர்ந்து பாராட்டத்தக்கது.