பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

பரிமேலழகர் இவ்வாறு எழுதிய பின்னும் இன்னும் பலர் ‘படித்த பின்’ என்றே பொருள் கூறுகின்றார்கள். எனின், அதிலும் ஒரு திறன் வேண்டும், நூலாசிரியரின் உள்ளக்கிடகையை உரையாசிரியர் கூற, அவர்தம் உரைதிறனை உணர்ந்து கொள்ளப் பேரறிஞரால் தான் முடியும். இந்த உரை நயத்தை எடுத்து விளக்கியவர் மறைந்த தமிழ்ப் பேரறிஞர் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாராவர். இத்துடன் வள்ளுவர் ‘பின்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் பரிமேலழகர் இவ்வாறே உரை கண்டுள்ளார் என்பதை அடிகளார் விளக்கியுள்ளார்.

எனவே நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை எடுத்துரைக்கும் உரையே போற்றத்தக்கவை. அவ்வகையில் சீறாப்புராணத்திற்கு எழுந்த உரை நூல்களை நாம் ஆயலாம்.

பாவலர் உரை

இந்த இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் புலவர் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் தம் பாட்டனாரான ஞானியார் அப்பா அவர்களின் ‘மெய்ஞ்ஞானப் பாடல் திரட்டை’ அச்சிடுவதற்காகச் சென்னைக்கு வந்து சேர்ந்த சதாவதானி அவர்கள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்தின் உரிமையாளரான இட்டா பார்த்தசாரதி நாயுடுவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டார். அவ்வச்சகத்தில் பணியுமேற்றார். அச்சமத்தில் நாயுடுவின் வேண்டுகோளுக்கிணங்க சீறாவைப் பரிசோதித்து அதற்கு அழகிய எளிய இனிய தீந்தமிழில் உரை எழுதி 1902இல் முதல் தொகுதியையும், 1908இல் இரண்டாம் தொகுதியையும் வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பும் பின்னர் வெளியாயிற்று, ஆனால் அதன் நீண்ட நாட்களாக மறு பதிப்பு இல்லாமல் உள்ளது. இதுவே சீறா முழுவதற்கும் இதுவரை வந்துள்ள ஒரே உரையாகும்.