பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

இவர் உரை ஆற்றொழுக்கான இலக்கிய இலக்கணப் புலமை நிறைந்த நடையாய் அமைந்துள்ளது. தொல்காப்பியம் சொல்லதி காரத்திற்குச் சேனாவரையர் உரை எத்துணைச் சிறப்புடையதோ அத்துணைச் சிறப்பாக இது அமைந்துள்ளது அவர்தம் இலக்கிய நடைக்குச் சிறிய சான்று.

‘நாயக! எமது கோரிக்கை நமக்கும் பொருந்துமேல் எதிர் வருமிரவிலே யாம் கருதிய புராணத்திற்கு முதலிலே வரைதற்காக மெய்யாகிய கடவுளினது ஒப்பறுதலைக் குறித்துப் புனையுங் கவிதைக்குத் தலைமொழியை எமக்கு வெள்ளிதாயறிவித்தல் வேண்டும். இல்லாவிடின் விழைந்தவுடனே இவ்வழியாக வெம்பதியடைதல் திண்ணம்!"

நூல் முழுவதும் குலாம் காதிறு நாவலர் உரையைப் பின்பற்றித் தழுவியும் மறுத்தும் உரையெழுதுகிறார். இது மீண்டும் பதிப்பித்தற்குரியது, இதன் போக்கையும் நடையையும் தழுவி ‘சீறாப் புராணம்’ முழுவதற்கும் ஓர் உரை வருமானால் அதுவே இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கு வைரக் குப்பாயமாக அமையும் என்பது திண்ணம்.

நாவலர் மறுப்பு

"உரைகடிலத்தைக் கண்ணுற்ற நாவலர்கள்
“காதிரசனா மரைக்கான் கைவைத்தாய் எம்முரையில்

மாதிரசம் மாய்ந்துபோய் மாய்”

என்று வசை பாடியுள்ளார். [மாதிரசம்: மா.சிறப்புக்குரிய திரசம்-திரேகரசம் (உடல் சத்து)].

இவ்வசை பாடியதோடு நில்லாது இதற்கு மறுப்பாக "உரைகடிலக நிராகரணம் என்ற நூலை வெளியிட்டார். காதிரசனா மரைக்காயரும் தாழ்ந்து போகாது ‘உரைகடிலக நிராகரணச் சூறாவளி’ என்றநூலைப் படைத்தார். இப்பகை பின்பு அவரவர் ஞானாசிரியர்களால் தணிவிக்கப்பெற்றது.