பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

றது’ என்று கம்பர் அவையடக்கம் கூறுகிறார். நளனது தெய்வீக வரலாற்றை பாட முயல்வது மதங்கொண்ட மாகளிற்றைத் தாமரைத் தண்டின் நூலால் கட்ட முற்பட்டதைப் போன்றது’ எனப் புகழேந்தியாரும் புகலுகின்றார். உயர் காப்பியம் பாடிய உமறுப்புலவரும் தமக்கே உரிய முறையில் அவையடக்கம் பாடுகின்றார்: அரிய உவமைகளை ஆளுகின்றார்.

பரந்து விரிந்துள்ள பாரதத்திலும் கடல் சூழ்ந்த தீவிலும் திக்கெல்லாம் செங்கோல் செலுத்தும் மாமன்னரும் கூலிவேலை செய்ய முயன்றும் உண்ணும் வகையற்று வருந்தும் பரம ஏழையும் சரியாவரா? பேரரசர் முன் பஞ்சப் பராரி எப்படியோ? அப்படியே செழுந்தமிழ் கவிஞர் முன் யான் விளம்புவது எனக் குறிப்பிடுகின்றார்.

“திக்கனைத்தீனும் பாரினும்
தீவினும் செங்கோல்
புக்க நன்னெறி திகிரி
மன்னவர்கள் முன் பொருந்தத்
தக்க கூலியும் செய்து உண
அறிகிலான் சரிபோல்
மிக்க செந்தமிழ்ப் புலவர்முன்
யான் விளம் புவதே.”[1]

இத்துடன் நிற்கவில்லை. பொழிவதை உறுதிப்படுத்த மும்முறை கூறுவது உலக வழக்கன்றோ? பெரும் புயற் காற்றுடன் உணவின்றி வருந்தும் சிற்றெறும்பின் மூச்சையும், பேரிடி முழக்கத்துடன் பெருவிரலின் நொடி ஒலியையும் இணைத்து அவையடக்கம் கூறித் தம் புலமைப் பெருக்கத்தைப் புலப்படுத்திவிடுகின்றார்.

  1. சீறா. கடவுள் வாழ்த்துப் படலம் 18