பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

403


கார்முகிலும் கருணை நபியும்

கடவுள் வாழ்த்திற்குப் பிறகு காப்பியத் தலைவரின் நாட்டு வளம் கூற விழைகிறார் நற்றமிழ்க் கவிஞர். கடவுளுக்கு அடுத்து கார்முகிலைச் சிறப்பிப்பது தமிழ் மரபாகும்.

விண்ணகத்து வெண் மேகம் மண்ணகத்து இறங்கிவந்து கடலில் படிந்து நீரினை முகந்துகொண்டு கருங்கடல்போல் எழுந்து வானம் சென்று பரந்து செறிந்து திரளுகிறது இதனை விளக்குதற்குக் காப்பியத்தின் கருப்பொருளாகிய நாயகத்தின் நற்புகழையே உவமையாகக் காட்டுகின்றார்.

'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காளை'

என்று உவமையின் தகுதியை உரைப்பர். வையகம் உய்ய வந்த வள்ளல் நபியின் புகழைக் காட்டிலுமா உயர்ந்த ஒன்று உள்ளது?

"தருங்கொடை நயினார் கீர்த்தி
     சகமெலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பில் அண்ட
    முகடுற நிறைந்த வேபோல்
இருங்கண வெள்ளை மேகம்
    இரைபசுங் கடல்வீழ்ந்து உண்டோர்
கருங்கடல் எழுந்தது என்னக்
    ககனிடை செறிந்து மீண்ட," [1]

நாயகமவர்களின் புகழ் நானிலமெங்கும் போற்றப் பெறுகின்றது. அவர்களின் சலவாத்துக் கூறப்படாத நேரமே இல்லை. வானவரும் போற்றுகின்றனர்; மறை வழங்கிய இறைவனும் போற்றுகின்றான். எங்கும் பொங்கிப் பெருகியுள்ள நாயகமவர்களின் வான்புகழை வானமெங்கும் விரிந்து அடர்ந்து செறிந்து பரவியுள்ள கார் மேகத்திற்கு உவமை காட்டியிருப்பது உவகை பயப்பதாகும்,

  1. 1. சீறா நாட்டுப் படலம், 1