பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


அரபுச் சொல்லின் பொருள் என்னவாக இருக்கும்? இதற்கு விளக்கம் அடுத்த பாட்டிலேயே கிடைக்கிறது.

"தூயவன் உரைப்பக் கேட்ட சொல்மறா தெழுந்து தங்கள்
காயமும் மனமும் வாக்கும் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி
நேயமுற் றிடப் பணிந்து நிரை நிரைக் கைக ளேந்தி
வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார்."

இதைப் படித்த பிறகு 'சுஜூது’ என்ற சொல் வணக்க நிலையைக் குறிக்கின்றது என்பது தெளிவாகும். சிர வணக்கமே 'சுஜூது’ ஆகும், காயமும் மனமும் வாக்கும் கலந்து நேயத்தோடு இறைவனைப் பணியும் ஒரு நிலைதான் 'சுஜூது’. இந்தப் பாடலில் 'மலக்கு' என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் புலவர். மலக்குகள் யார்?

"வானவர் செய்யும் அந்த வணக்கத்தின் முறை செய்யாமல்."

என்று வரும் அந்தப் பாடல் மலக்குகள் என்போர் வானவர் என்பதை விளக்கி விடுகிறது. உமறுப்புலவரின் தனிப்பெரும் உத்தி இது. தமிழ் மணமும், இஸ்லாமிய மணமும் இங்கெல்லாம் இரண்டறக் கலந்து நிற்பதைக் காண்கிறோம்.

இது மட்டுமன்று, பாத்திரங்களின் பெயர்களை உரிய முறையில் சொல்லிச் செல்வதிலும் உமறுப் புலவர் தனிப்பட்ட அக்கறை செலுத்த வேண்டிய நிலைமை இருக்கிறது. காரணம், காவிய மாந்தர்களின் பெயரனைத்தும் அரபுப் பெயர்கள்.

ஜிபுரயீல், அபூபக்கர், அப்துல்லா, இபுராகீம், இசுராயீல், இபுலிஸ் முதலான பெயர்களை அரபு மொழிச் சொற்பயிற்சி இல்லாத தமிழ் மக்களும் மனத்தில் கொள்ளும் படி அறிமுகம் செய்து வைக்கிறார் புலவர். 'வானவர்க்கு இறைவன் ஜிபுரயில்' என்பதிலிருந்து ஜிபுரயில் வானவர்