பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


மூன்று படலங்களைக் கொண்டது. நுபுவத்துக் காண்டம் நபி பட்டம் பெற்ற படலம் முதலாக விருந்துாட்டுப்படலம் ஈறாக இருபத்தொரு படலங்களை உடையது. ஹிஜூறத்துக் காண்டம் மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் முதலாக உறனிக் கூட்டத்தார் படலம் ஈறாக நாற்பத்தேழு படலங் களையுடையது. சீறாப்புராணம் முழுவதும் முற்றுப் பெற வில்லை. நபிநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு இக் காவியத்தில் முற்றுப் பெறவில்லை. எக்காரணத்தாலோ உமறுப் புலவர் அதனை முடிக்காமல் விட்டார். முற்றுப் பெறாத எஞ்சியப் பகுதியைப் பனு அகமது மரைக்காயர் அவர்கள் செய்து முடித்தார். இதற்கு 'சின்ன சீறா' என்று பெயர் வழங்குகிறது.

தமிழில் இஸ்லாம் சமய இலக்கியம் இல்லை என்ற குறையை உமறுப்புலவர் சீறாப்புராணம் பாடி நிறைவாக்கினார். பின்னர் வெளிவந்த இராஜநாயகம் போன்ற சிறந்த நூல்கள் தோன்றுவதற்கு முன்னே அந்நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து வழி காட்டியவர் உமறுப் புலவர்.

உமறுப் புலவரின் கவிதை நடையை அறிய வேண்டுமானால் அந்நூலைப் படித்துத்தான் அறிய வேண்டும். ஆயினும் அக்காவியத்திலிருந்து இரண்டொரு செய்யுட்களைக் காட்டி, இதனை முடிக்கிறேன்.

கபுகாபு என்னும் சிறுவனை அவனுடைய பெற்றோர் எப்படி அருமையாக வளர்த்தார்கள் என்பதை உமறுப் புலவர் இவ்வாறு உறுகிறார்.

"உத்தமர் செல்வம் போன்றும் உளத்தணுமா சொன் றில்லா
பத்தியர் தவமே போன்றும் பகரரும் விசும் பிற்றோன்றும்
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி
வைத்ததோர் உடம்பு போன்றும் நாட்கு நாள் வளர்ந்திட்டாரால்.’’[1]


  1. 1. சீறா. கபுகாபு: படலம்