பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு
நறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய்
விண்ணினிற் படம் வ தேனியொன் றமைத்து
விசும்பினுக் கிடுவது போலும்" [1]

காலத்தின் கோலம் ஊர் விட்டு ஊர் போகின்றனர், சில குடும்பத்தினர். ஒரு வீட்டில் கணவன், மனைவி சின்னக் குழந்தைகள், கணவன் மனைவியைப் புறப்படப் பணிக்கிறான். அவளும் வேறு வழி இல்லாமல் கணவன் உடன் புறப்படுகிறாள். (அச்சமயம்) அவளோ தாய். தாயாகி ஒரு குழந்தையைத் தாங்குபவள்: இன்னொரு குழந்தைக்குத் தாயாக இருப்பவள்! ஆம் அவள் ஒரு கர்ப்பிணி, இடுப்பில் ஒரு குழந்தை; இடை வயிற்றில் ஒரு குழந்தை! நடக்கிறாள்; சோர்கிறாள் மூச்சு வாங்குகிறாள். கணவன் மேலே கடுப்பு, கடுங் கோபம்; என்றாலும் அவர் இட்ட வழியே தொட்டுப் போகிறாள்; செல்லும் வழியோ, கல்லும், முள்ளும் அவளோ மாங்காய் வடுவைப் பிளந்து இரு பக்கமும் நட்டு வைத்தாற் போன்ற மலர் விழிகளை உடையவள். அங்கு ஒடும் மானின் மருட்சிப் பார்வைக்கு உரியவள்!-இடுப்பில் ஒரு குழந்தையும் இடையில் ஒரு குழந்தையுமாக அவள் அதோ-தன் கணவனுடன் கலங்கித் தயங்கி மயங்கி நடந்து செல்லும் காட்சி:

இடுக்கிய குழந்தையு மேந்து பிள்ளையும்
வடுப்பிள வனையகண் மான னார்களும்
கடுப்பினிற் கணவன்மா ருடனுங் கற்குவைத்
திடர்ப்படு சிறுநெறிச் செல்கின் றாரரோ" [2]

சீறாப்புராணம்-நல்ல கவிதைகளின் களஞ்சியம்! கற்பனைத் திறன்களின் கருவூலம்! கருத்துக்களின் உருவப் பேழை! கவரும் உவமைகளின் பெட்டகம்! இலக்கிய இன்பம் பெற விழைவோர்க்கு அமுதக் கடலாக விளங்குகிறது சீறப்புராணம் எனக் கூறின் அஃது மிகையன்று.


  1. 1. நகரப் படலம் 13
  2. 2. சீறா அலிமா முலையூட்டுப் படலம் 24