பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

விசும்பினைத் தடவ வரைசத கோடி
வீற்றிருந் தனவெனச் சிறக்கும்" [1]

வண்ணம் நெற்போர்கள் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு மருதநிலத்தைச் செழிக்க வைக்கும் வெள்ளம் கடல்காணும் விருப்பில் நெய்தல் நிலத்திற்கும் சென்று சேர்கிறது!"

அந்நாட்டில் பொருளை வெறுக்கும் நிந்தனையைத் தவிர வேறு நிந்தனையில்லை; வண்டுகளைத் தவிர மதுவருந்துதல் வேறில்லை. ஊடலை நீக்குவதற்காக மங்கையரிடம் ஆடவர் கூறும் பொய்ச் சூள் தவிர வேறு பொய்யில்லை, வனங்களிலுள்ள கனிகளை வழிப்போக்கர்கள் அடித்துச் சுவைக்கும் களவைத் தவிர வேறு களவில்லை என்பதை உமறுப்புலவர்,

"நினைக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர்
நிந்தனை சிந்தனை இலையே;
இனக்கருஞ் சுரும்பு மதுத் துளி அருந்தும்
இவையலால் மதுப்பிறி (து) இலையே;
சினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவி
திருத்தும் பொய் அலதுபொய் இலையே:
வணக்கணி கறுத்த குலைக்கள(வு) அலது
மறுத்தோறு கொலைக் கள(வு) இலையே!"[2]

என்று பாடிக் களிக்கிறார்.

அரபு நாட்டின் நடுநாயகமாய் விளங்கும் மக்கமா நகரத்திற்குத் தான் என்ன குறை? பல்வகை வளங்களும் மகிழ்ச்சியும் நிரம்பப் பெற்று ஒரு சுவர்க்க உலகமாகவன்றோ அது காட்சியளிக்கிறது. உமறு காட்டுவதால், தமிழ் நாட்டு மரங்களும், விலங்குகளும், பறவைகளும் மணப் பொருள்களும், நில வளமும் கொண்ட நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் வறண்ட பாலையாகிய அரேபியாவில் நம்மால் காணமுடிகிறது.


  1. 1. சீறா. நாட்டுப் படலத்தி 39
  2. 2. சீறா நாட்டுப் படலம் 56