பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


இலக்கியப்பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் சொண்டிருந்தது. இலக்கிய இருள் மேகத்தைக் கிழித்து ஒளிபாய்ச்சியது சுருங்கச் சொன்னால் இலக்கிய வரலாற்றில் படியவிருந்த இருளை, தேக்க நிலையைப் போக்கிய பெருமையின் பெரும்பகுதி இஸ்லாமியத் தமிழ் புலமை உலகையே சாரும், முன்னூறு ஆண்டுக் கால வரலாற்றின் முழுச் சொந்தக்காரர்களாக இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தங்களை ஆக்கிக் கொண்டார்கள் என்று கூட கூறலாம்.

முன்னூறு ஆண்டுகளில் உருவாகி வெளிவந்த இலக்கியங்களில் எண்ணிக்கைப் பெருக்கத்தில் மட்டுமல்லாமல் கருவிலும் உருவிலும் கூட தனி வழி கண்டு இமயமென உயர்ந்து நின்றவர்கள் இஸ்லாமியப் புலவர்கள் என்பதை எளிதில் மறக்கவோ மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

தமிழுக்கேயுரிய இலக்கியப் பண்புகளைப் போற்றிப் பாதுகாத்து நிலைபெறச் செய்ததோடு, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே' என்ற நன்னூலாரின் கூற்றுக்கேற்ப- கால வளர்ச்சிக்கொப்ப புதியன போற்றி படைப்போர். மசலா, கிஸ்ஸா போன்ற புதுவகை இலக்கியத் துறைகளைப் புகுத்தி வீழ்ச்சியை நோக்கிச் சென்ற தமிழ் இலக்கிய உலகைத் தடுத்து நிறுத்தியதோடு வளர்ச்சிப் பாதையிலே இமயமென நிமிர்ந்து நிற்கச் செய்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலமை உலகையே சாரும் என்பது மிகைப்படுத்திக் கூறுவதல்ல; தமிழ் இலக்கிய வரலாறு தெளிவாகப் புகட்டும் உண்மை.

மொத்தத்தில் முறையாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதும்போது 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரையுள்ள முன்னூறு ஆண்டுக் கால இலக்கிய வரலாற்றை பெரும்பாலும் இஸ்லாமியத் தமிழப் புலவர்களின் வரலாறாகத் தான் எழுத முடியும். இதை காலத்தின் தீர்ப்பு என்றே கூறிவிடலாம்.