பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


ஆம்! இத்தனையும் உண்மையில் அல்ல; கதீஜாவின் கனவில் நிகழ்ந்தவையாம்! கனவுக் காட்சியை அமைத்தேனும் அரபு நாட்டில் தமிழ்நாட்டு நானிலக் காதற் சூழலை உருவாக்க வேண்டுமென உமறு எண்ணியிருப்பதை இங்கே உணர முடிகிறது.

அறன் வளர்த்தல்

உமறுப்புலவர் சீறாப்புராணத்தில் தமிழ்ச் சான்றோர் வற்புறுத்தும். 'அறஞ் செய்கைப்' பண்பாட்டினை அழகுற எடுத்தோதுவதைக் காணலாம். நாயகத்தின் தொடர்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளில் இதனைக் கவிஞர் ஆண்டாண்டு சொல்லிச் செல்கின்றார் என்றாலும் ஓரிடம் நம் உள்ளத்தைக் கவரும் வகையில் அமைந்து இன்புறுத்துகிறது. நபிகள் நாயகம் 'ஹிறா' மலையில் தங்கிருந்தபோது வானவர் தலைவர் 'ஜிபுறயீல்' தோன்றி அவரை இறுக அனைத்து, 'இறைவனின் வேதத்தை ஒதுக' என்று சொல்வித் தந்த நிகழ்ச்சி அவருக்கு அச்சத்தைத் தந்து விட்டது. அதனால் காய்ச்சலுற்று நடுங்கிக் கிடந்தார்கள் நபிகள் நாயகம். அப்போது அன்னை கதீஜா அருகிருந்து,

"தாங்கும் மெய்ப்பொருள், அறிவு அருள் குணம்தயவு இரக்கம்
நீங்கி டாது அறம் பெருகிட வளர்க்குநன்நெறியீர்!
ஒங்கு மாநிலத்து இடத்துறை பவர்களால்உமக்குத் [1]
தீங்கு உறாதென உரைத்தனர்' மடந்தையர் திலதம்"

என்று தேற்றியதாகக் கவிஞர் கூறுகிறார். இம் முத்தாய்ப்பான பாடலில் மெய்ப் பொருள் அறிவு, அருட்குணம், தயவு, இரக்கம் நீங்கிடாமல் அறம் செய்வோர் அழிவதில்லை என்று தமிழரின் அறப் பிழிவு அன்னை கதீஜாவின் வாய்ச் சொல்லாகக் காட்டப்படுகிறது.


  1. 1. சீறா. நபிப்பட்டம் பெற்ற படலம் 38