பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்த்துக் கொண்டே வந்தார் ஆசிரியர். படம் போட்டு வைத்திருந்தானே, அந்த மாணவனுடைய பலகையைக் கண்டதும், ஆசிரியருக்கு அளவு கடந்த கோபம் வந்து விட்டது! உடனே பிரம்பை எடுத்தார். “டேய், உன்னை நான் கணக்குப் போடச் சொன்னனா, படம் போடச் சொன்னேனா?” என்று கேட்டுக் கொண்டே நன்றாக அடித்து விட்டார்.

    அப்போது அருகிலே இருந்த நாடகத் தலைவர் அவன் வரைந்திருந்த  படத்தைப் பார்த்தார். பார்த்ததும், “ஆஹா, எவ்வளவு அழகாகப் போட்டிருக்கிறான்! இவணப் பாராட்டாமல் அடித்து விட்டீர்களே!” என்றார்.

உடனே ஆசிரியரும் அந்தப் படத்தைக் கூர்ந்து பார்த்தார் பார்த்ததும், அவருடைய கோபம் பறந்து விட்டது! உடனே, அந்த மாணவனை அன்பாக அனைத்துக் கொண்டு, “மிகவும் அழகாகப் போட்டிருக்கிறாய், ஆனாலும், கணக்குப் போட வேண்டிய நேரத்தில் படம் போடலாமா?” என்றார்.

சிறு வயதிலே சித்திரம் வரைவதில் தேர்ச்சி பெற்று இருந்த அந்த மாணவன், பெரியவனானதும் ஒரு நல்ல ஓவியனாக விளங்கினான். ஓவியனாக மட்டும் விளங்கவில்லை; சிறந்த கவிஞனாகவும் விளங்கிளுன்! 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது ’ என்ற பாட்டைப் பாடி, விடுதலைப் போருக்கு வேகம் கொடுத்த கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளைதான் அந்த மாணவன்!

12