பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வேர்க்கடலை
    மணி அடித்தது. உபாத்தியாயர் வகுப்பிற்குள் நுழைந்தார். வகுப்பிலே காலை வைத்ததும், 'சர சர' என்ற சத்தம் கேட்டது. கீழே பார்த்தார். தரை முழுவதும் வேர்க்கடலைத் தோல்கள் கிடந்தன. உடனே அவருக்கு அபாரமாகக் கோபம் வந்துவிட்டது!
    “ஏ பையன்களா, வகுப்புக்குள் வேர்க்கடலை தின்றவர்கள் யார், யார்? உண்மையைச் சொல்லிவிடுங்கள்” என்றார்.
    ஒருவரும் பதில் சொல்லவில்லை. “சொல்லமாட்டீர்களா? சரி, முதலில் நீங்கள் எல்லாரும் சேர்ந்து இந்தத் தோல்களைப் பொறுக்கி வெளியிலே கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வாருங்கள்” என்று உத்தரவு போட்டார் உபாத்தியாயர்.
    உடனே எல்லாப் பையன்களும் வேக வேகமாக வேர்க் கடலைத் தோல்களைப் பொறுக்க ஆரம்பித்தார்கள் ஆனால், ஒரே ஒரு பையன்மட்டும் அசையாமல் நின்ற இடத்திலே நின்றான். அவனைப் பார்த்ததும் உபாத்தியாயரின் கோபம் அதிகமாகிவிட்டது. 'விறு விறு' என்று அவன் அருகே சென்றார். அவனை அடிப்பதற்காகப் பிரம்பை ஓங்கினார். அவரது கோபத்தைக் கண்டோ அல்லது அவரது கையிலிருந்த பிரம்பைக் கண்டோ அந்தப் பையன் நடுங்கி விடவில்லை. தைரியமாகவே நின்று கொண்டிருந்தான்!
    “டேய், ஏன் சும்மா நிற்கிறாய்? நீயும் தோல்களை எடுக்கிறாயா, அல்லது...உம்” என்று பயமுறுத்தினார் உபாத்தியாயர்

“நான் வேர்க்கடலையை இங்கே சாப்பிடவில்லை. அதனால்தான் தோல்களே எடுக்கவுமில்லை!" என்று தைரியமாகக் கூறினான் அந்தப் பையன்.

35