பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ஆர்லோவ் தம்பதிகள் "ஏ கருணையுள்ள கடவுளே, அது மட்டும் அவ்விதமே ஆகுமானால்!” "இது எதுவும் இப்ப வேண்டாம்.” "கிரிகரி, என் அன்பே!" அவர்கள் பிரிந்து போகும்போது ஒருவருக்கு மற்றவர் மீது ஏற்பட்டிருந்த புதுரக உணர்ச்சி இருவர் உள்ளத்திலும் நிரம்பி நின்றது. அவர்களுடைய நம்பிக்கை அவர்களே உற்சாகிகளாகவும், துணிச்சல் உடையவர்களாகவும், எலும்பு தேய்கிறவரை உழைக்கச் சித்தமானவர்களாகவும் மாற்றி விட்டது. அடுத்த மூன்று அல்லது நான்கு தினங்களில் அநேக தடவைகள் கிரிகரி.அவனதுஉழைப்பின் வேகத்திற்காகவும் திறமைக்காவும் பாராட்டுதல்கள் பெற்றான். அதே வேளையில் புரோனினும் இன்னும் சில உதவியாளர்களும் அவன் மீது பொறாமை கொண்டு அவனுக்குச் சிறு தீங்குகள் செய்ய முயற்சித்ததையும் அவன் கவனித்தான். விழிப்பு அடைந்தான். அந்தத் தடிமூஞ்சி புரோனின் மீது அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னர் அவன் புரோனின் கூட சிநேகம் கொண்டாடவும், 'இதயத்தோடு ஒட்டும்' பேச்சுக்கள் பேசவும் விரும்பியது உண்டு. அவனது சகாக்கள் அவனைப் பழிப்பதற்காக எடுத்துக் கொண்ட ஒளிவு மறைவு இல்லாத முயற்சிகளைக் காணக் காண அவனுக்கு மிகுந்த மன வேதனை தான் உண்டாயிற்று. 'அயோக்கியர்கள்' என்று அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, பற்களைக் கடித்தான். அவர்களுக்கு பதிலுக்குப்பதில் செய்ய பாடம் கற்பிக்கத் தான் தயங்கப் போவதில்லை என்றும் அவன் உறுதி செய்து கொண்டான்.