பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 83 கிரிகரியை அழுத்திக் கிடந்த கனத்த வியாகுலத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டு திடீரென்று பிரகாசித்தது ஏதோ ஒரு நினைவின் ஒளி. அந்த ஒளியை அதிகப்படுத்துகிற மாதிரி அவன் பலமாகத் தனது நெற்றியைத் தேய்த்தான்: பிறகு சடாரெனத் திரும்பி, அறைக்கு வெளியே ஓடி, முற்றத்தைத் தாண்டி, தெருவில் ஒடலானான். "அட கடவுளே! அந்தச் செம்மானுக்கும் அது வந்து விட்டது! அவன் ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான்" என்று, ஆர்லோவின் திடீர் பிரிவுக்கு விளக்கம் கூறும் வகையில், சமையல்காரி ஓலமிட்டாள். அவளுக்கு அடுத்தாற்போல் நின்ற மேட்ரோனா முகம் வெளுத்தாள்; தன் கண்களை அகல விரித்தாள் உடல் விதிர் விதிர்க்க நின்றாள். உதடுகள் மிக லேசாக அசைய அவள் கரகரப்பாக முனங்கினாள்: "அது பொய். அந்தப் பாழும் நோய் கிரிகரியை அணுக முடியாது. அவன் அதை அணுகவிட மாட்டான்.” எனினும். சமையல்காரி ஓலமிட்டுக்கொண்டே வெளியே ஒடினாள் ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு, அண்டை அயலார்களும் வழியோடு போகிறவர்களுமாக ஒரு சிறு கும்பல் வியாபாரி பெடுன்னிக்கோவின் வீட்டு முன்னால் தெருவில் கூடிவிட்டது. எல்லோர் முகங்களிலும் ஒரேவித உணர்ச்சிகள்தான் பிரதிபலித்தன: பரபரப்பும் நம்பிக்கை இழந்த கவலைக் குறியும் மாறி மாறித் தோன்றின. தீய எண்ணமும், வீரத்தனம் போன்ற பாவனையும் காணப்பட்டன. வெறும் கால்கள் மின்ன ஸென்கா முற்றம் நோக்கிப் பாய்வான்; மறுபடியும் உள்ளே நுழைவான். இப்படியாக அந்த வாத்தியக்காரனின் நிலைமையை கூட்டத்துக்கு எடுத்துச் சொல்வதற்குப் பாடுபட்டான் அவன்.