பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சிரிப்பதிகாரம்


முகத்தைப் பார்த்தீர்களா? மருந்துக்காவது அந்த முகத்தில் சிரிப்பு உண்டா? ஊஹூம், கிடையாது. பர்னாட்ஷா மட்டும் பல்லைக் காட்டி சிரித்திருந்தால் அவர் பணமெல்லாம் பறி போயிருக்கும். பணம் போயிருந்தால் எண்ணத்தை எழுதியிருக்க முடியுமா? ஒரே சோகமயமான ஹாம்லெட்டுக்களைத்தான் எழுதியிருக்க முடியும். ஆக பெர்னார்ட்ஷா சிரிக்காமலிருந்ததால்தான் பெரிய ஷா ஆக முடிந்தது என்பது வெள்ளிடைமலை

அட அதுதான் போகட்டும். நம்ம மிஸ்டர் திருவள்ளுவர் இருக்கிறாரே. அவர் சிலை யைப் பார்த்தீர்களா? ஏதாவது மாதிரிக்காவது சிரிப்பு ரேகை இருக்கிறதா? இல்லை, காரண மென்ன? சிறந்த ஞானியான வள்ளுவருக்குச் சிரிப்பின் பயங்கரம் நன்கு தெரியும். இதற்கு அகச்சான்று வேண்டுமானால், அதாவது தக்க ஆதாரம் தேவையென்றால் திருக்குறளி லிருந்தே தெரிவிக்க முடியும்.

எனக்கு முன் பேசிய சிரிப்பானந்தர் என்ன சொன்னார்? மனிதனுக்கு முகம் இருப்பதே நகைப்பதற்காகத்தான் என்றார். இதை அடி யோடு, முடிவோடு, தடிகொண்டு தாக்குகிறார் வள்ளுவப் பிரான். ‘முக நக நட்பது நட்பன்று’ எனும் குறளில். அன்று என்பதை தீபகமாக வைத்துக் கொண்டுபார்த்தால், பொருள் வெளிச்சம் நன்கு புலப்படும். அதாவது, முகம் நக அன்று. ஆகவே முகநக நட்பது நட்பன்று என்பதே சிரிக்காத வள்ளுவரது எண்ணம். இந்தக் கருத்தை அடுத்த குறளில் வலியுறுத்துகிறார்’

“நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்”