பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

195




படமாகத்தான் வெளிவந்திருக்கும். பணமும் கிடைத்திருக்கும். என்னவோ, போங்கள்! திடீரென்று நான் மாறிவிட்டேன்! ஆசையின் வேகம், பணம் போட்ட மமதை, கேட்பாரற்ற காட் டுச் சுதந்திரம், இந்தச் சூழ்நிலையால் என் மதி, மயங்கியே விட்டது. எனக்குத் தெரியாத கலை நுட்பம் எதுவுமே இல்லை என்ற தலைக்கணம் மலைக்கனமாக ஏறிவிட்டது! - -

யார் யாரோ எனக்கு நல்லதைச் சொல்ல முன் வந்தார்கள். நல்லவர்கள் பேச்சு என் காதில் விழவில்லை. காரணம் கதாநாயகி கற்பூரவல்லி கண்வலையில் நான் ஒரு கலை மீனாகி விட்டேன். பாதிப்படம் வரை எல்லோருக்குமே வெகு திருப்தியாயிருந்த கதையில் திடீரென எனக்குக் கோளாறு தென்பட்டது. அன்று ஒருநாள் படத்தின் கதாநாயகி தனக்குக் கதை பிடிக்கவில்லை என்று என்னிடம் தனியாகச் சொன்னது தான், என் மனமாற்றத்துக்குக் காரணம். அவளுக்கு அப்படித் தோன்றுவதற்கு காரணம் எங்கள் கம்பெனியின் கதை ஆசிரியர்! கதாநாயகியைக் கண்டதும் எழுந்து நின்று கும்பிடவில்லை என்பதுதான் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியமான காரணம்! அதை விட முக்கியமான காரணம் என் கெட்ட காலம்!

உடனே அந்த கதாசிரியரைக் கூப்பிட்டேன். கதா நாயகனுக்கிருந்த கட்டங்களை வெட்டச் சொல்வி, கதா நாயகிக்கே அதிகப் பகுதிகளை மாற்றி அமைக்கச் சொன்னேன். கதை செத்துப் போகும் என்று வாதாடினார் எழுத்தாளர். அவர் கூறியது. உண்மைதான். ஆனால் அவரது வார்த்தைகள் அப்போது எனக்குக் கோபத்தைத் தான் மூட்டின. “ஒய்! கதை என்னய்யா கதை உம்முடைய கதை என் படத்துக்காக என் படம் கதாநாயகிக்காக, இந்தக் காலம் கதாநாயகிகள் காலமே தவிர, கதாநாயகர்கள் காலமல்ல, ஆகையால் உலக சேமத்தை முன்னிட்டு, உமது கதையைக் கதாநாயகிக்காக மாற்றிவிடும். கதை சாகட்டும். கதாநாயகி பிழைக்கட்டும் அவள் ஒரு கற்பகச் சோலை’ என்று கடிந்து கொண்டேன்.