பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

199




அதற்கடுத்த வாரம் எங்கள் படத்தை நாங்களே திரையிட ஏற்பாடு செய்தோம். செத்துப் போன சித்தர் - டைரக்டர் - கதாசிரியர் இத்தனை பேருக்கும் இதுவே கடைசி படம் - காணத் தவறாதீர்கள் - என்று விளம்பரம் செய்தோம்.

எவ்வளவு கேவலமான சுயநலம் பாருங்கள்! செத்துப் போனவர் பெயரைச் சொல்லி, பொதுமக்களின் பணத்தைப் பறிக்கும் அளவுக்கு, எங்கள் அறிவு மட்டமாகிவிட்டது சார்:

ஆனால் நம் ஜனங்களா ஏமாறுபவர்கள்? எப்படி எல்லாமோ, ‘பார்க்கத் தவறாதீர்கள் என்று பக்கம் பக்கமா விளம்பரம் போட்டும், என் படத்தை எல்லோருமே பார்க்கத் தவறிவிட்டார்கள். ஸ்ரீமான் அனுமாரும் என்னைத் தவிக்கும் படி செய்து விட்டு எங்கேயோ தாவி மறைந்து விட்டார். “சார்! நான் என்ன செய்வேன்? என்று கூறி ஓவென்று கதறினார் அந்த மனிதர்.

“ஏன் ஐயா அலறுகிறீர்! வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்று அழுகிறீரா? பேசாமல் ‘முடியாது’ என்று கைவிரித்து விட்டு நிம்மதியாயிரும். இந்தக் காலத்தில் கடன் கொடுத்தவன்தான் அழவேண்டும், வாங்கியவன் ஜாலியாக இருக்கலாம்” என்றேன்.

‘என் காரணமாக அகால மரணமடைந்த அந்த எழுத்தாளர், டைரக்டர், கதாநாயகன் இம்மூவருடைய குடும்பங்களுக்கும் ஏதாவது ஒரு வழி செய்தால்தான் என் உயிர் அமைதியாகப் பிரியும். அதுவரையில்..” என்று கூறி விம்மத் தொடங்கிவிட்டார் அந்த மனிதர்.

அவர் அழுகையைக் கண்ட எனக்கு ஏதோ ஒரு உணர்ச்சி உண்டாகிவிட்டது. உமது வாழ்வின் முடிவில் நீர் இல்லை. இப்போதுதான் உமது புது வாழ்வைத் துவங்கி இருக்கிறீர்! செய்தவற்றை உணர்ந்த நீர்தான் புதிய மனுஷர்! அழுகையை விட்டுவிட்டு என்னோடு புறப்படும். முடிந்த வரை நீர் செய்த பாவத்துக்குப் பிரயாச்சித்தம் தேடலாம்.