பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக்கோட்டை அழகிரிசாமி 103

விட்டேனும் எங்காவது ஓடிவிட்டிருப்போம். ஆம். பெரியார் ஒருவர்தான் நம்மை இந்நாட்டோடு இணைத்து வைத்திருக்கிறார். அவரது பகுத்தறிவும் அன்பும்தான் நம்மை அவர்பால் இழுத்து அவர் வழிச் செல்லத் தூண்டுகிறது. அன்னாரையோ அல்லது இயக்கத்தின் வளர்ச்சியையோ சரிவர அறிந்திருக்க மாட்டார்கள் இந்தப் பதவி வேட்டை உருவாரங்கள்.

ஆகவேதான் சில சந்தர்ப்பங்களில் அவரை எதிர்த்து விஷமம் செய்து பார்க்கிறார்கள்.

இவர் தமது இயக்கத்தை ஆரம்பித்த காலம் 1925 அல்லது 1926 ஆக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் நம் மாகாண அமைச்சரா யிருந்தவர் நமது மதிப்பிற்குரிய பனகல் அரசர் ஆவார்கள். அவர் ஒரு தலைசிறந்த அறிவாளி, கைதேர்ந்த ராசதந்திரியும் கூட.

அவர், "பொதுப் பணம் ஏராளமாகக் கோயில்களில் வீணாக்கப் படுகிறது, அனைத்தும் பார்ப்பனர்களின் வாழ்வுக்கே உபயோகப்பட்டு வருவதோடு, நம் மக்கள் வேறு மடையர்களாக்கப்பட்டு வருகிறார்கள், இதைக் கட்டுப்படுத்தக் கோயில்கள் தம் வரவு செலவு கணக்குகளைச் சார்க்காருக்குக் காட்ட வேண்டும்” என்று சட்டம் செய்யத் தீர்மானித்தார். அப்படிப்பட்ட ஒரு சட்டம் செய்ய, அவசியம் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். அவருடைய அன்றைய ஜஸ்டிஸ் கட்சியோ, மிட்டாதார் மிராசுதார், ஜமீன்தார் இவர்களின் கூட்டமாக இருந்ததால், தம் கட்சித் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கஷ்டமென்று கண்டுகொண்டார். அத்திட்டத்திற்குப் பொதுமக்கள் ஆதரவை யாராவது திரட்டிக் கொடுத்தால் நலமாக இருக்குமென்று கருதி, அப்பணியை யாரிடம் ஒப்படைப்பதென்று யோசிக்கலானார்.

அவருடைய யோசனைக்குப் பெரியார் ஒருவர்தான் பிடிபட்டார். பெரியாரிடம் வந்து இரண்டு மூன்று நாள் தொடர்ந்து பெரியார் அவர்களுடன் கலந்து பேசினார். காங்கிரசிலிருந்தபோதே வகுப்பு வாரிப் பிரதிநிதித்வத்திற்காகவும், சமுதாய சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டு, அதன் காரணமாக அதைவிட்டு வெளியேறி விலகியிருந்த பெரியார் அவர்களும், அவரது வேண்டுகோளுக்கு இணங்கித் தமிழ்நாடெங்கனும் இப்பொல்லாத பிராமணியத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

"சாமிக்கு அரிசி பருப்பு ஏன் படைக்கவேண்டும்? அந்தச் சாமி சாப்பிடுவதாக எந்த டாக்டராவது சர்டிபிகேட் எழுதிக் கொடுப்பாரா?