பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சிறந்த சொற்பொழிவுகள்

7. கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் வ. உ. சிதம்பரம்பிள்ளை (13, 3. 1928)

தலைவர்களே ! சீமான்களே ! சீமாட்டிகளே ! நமது தேசத்தில் இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை. அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டுவரத் தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள். அம்முடிவை நீங்கள் நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக் கவர்மெண்டுக் கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப்பெறும் கலாசாலை, பாடசாலைகளிலும் இத்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

நம் தேசத்தினர் கலாசாலைகளில் படித்து வெளிவந்தவுடன் கவர்ன்மெண்டு உத்தியோகங்கட்கும், கிளர்க்கு வேலைகட்கும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் அவ்வேலைகட் கன்றி வேறு வேலைகட்கு உபயோகமானவர்களாக இருக்கவில்லை. கவர்ன்மெண்டிலும் எத்தனை பேருக்குத்தான் உத்தியோகம் கிடைத்தல் கூடும்?

இந்தியாவில் ஸ்கூல்பைனல் பரீட்சையில் தேறியவர்கட்கு எத்தனை பேருக்கு உத்தியோகம் கிடைக்கிறதென்று கணக்கிட்டால், ஆயிரத்துக்கு ஒரு பேரும், எப்.ஏ., பி.ஏ., எம்.ஏ.க்களில் ஆயிரத்துக்கு இருபத்தைந்து பேருக்குமேல் உத்தியோகம் கிடைப்பதில்லை. மற்றவர்க்குப் பிழைப்புக்கு வழியில்லாமலிருக்கிறது. &

வக்கீல் உத்தியோகத்தில் எனக்குள்ள அனுபவத்தைக் கூறுகிறேன். 1924ஆம் வருஷத்தில் மீண்டும் நான் வக்கீல் தொழிலில் புகுந்தேன். அப்போது சராசரி மாதம் ரூபாய் ஆயிரம் எனக்கு வரும்படி வந்தது. அவ்வமயம் இருபது வக்கீல்கள் என்னுடனிருந்தனர். இப்பொழுது நாற்பது வக்கீல்கள் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது மாதம் ரூபாய் நானூறு, ஐந்நூறுதான் வருகின்றது. பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம் உத்தியோகமென்றே கூறலாம்.