பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

சிறந்த சொற்பொழிவுகள்

வெளிநாட்டவரைத் தடுத்து அடித்துத் துரத்தாத கடவுள்களைப் பற்றி இன்றுவரை இந்நாட்டு மக்கள் சிந்திக்கக்கூட இல்லையே!

வேதங்கள், புராணங்கள், மந்திரங்கள், தீர்த்தங்கள், சாமியார்கள் எனும் பலப்பல தெய்வீகத் தன்மைகள் இந்நாட்டைச் காப்பாற்றியதாக ஒரு சான்று காட்ட முடியுமா?

அறியாமை, அச்சம், மூடபக்தி முதலியவற்றிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு நாடு இந்தியாவைப் போல் வேறெங்கேனும் காணப்படுமா? நம் மக்களை முன்னேற்ற வேண்டும் என்று எந்தக் கடவுளாவது வழிகாட்டி உதவியிருக்கிறதா? மக்களில் சிந்தனையாளர்கள் சிலர் மட்டும் பொதுநலம் பற்றிக் கவலைப் படுகிறார்கள்; அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்; பாடுபடுகிறார்கள். படையல் கொள்ளும் தெய்வங்கள் மக்களுக்கு நன்றி காட்டி உதவ முன் வருவதேயில்லை. இதுவே காலங்காலமாய்க் கண்டு வரும் உண்மை நிலை,

மனிதர்கள் உழைத்து உழைத்து முன்னேறி வருகிறார்கள். முயற்சியால், ஊக்கத்தால் பல பயன்களை உருவாக்கி வளர்ச்சிநிலை பெற்று வருகிறார்கள். இதுதான் நடைமுறை: உண்மைநிலை,

தாழ்ந்து கிடந்த நமது நாட்டில் நாலா புறங்களிலும் காலந்தோறும் நல்லோர் சிலர் தோன்றி, மக்களுக்கு நல்லுரை கூறி நல்வழிகாட்டி வருவதை வரலாறு காட்டுகிறது.

கடவுள், சமயம், மேலுலகம் பற்றியெல்லாம் பலப் பல விளக்கங்கள் கூறுவோர் எண்ணிக்கையே இங்கு அதிகம். கற்பனை உலகில், மயக்கம் தரும் போதனைகள் கூறுவதே நம்நாட்டில் அதிகம். அதனால் ஒரு பயனும் இதுவரை தோன்றக் கானோம்.

கல்வி, உழைப்பு, தொழில், பண்பாடு, முன்னேற்றம், புதுமை பற்றியெல்லாம் கூறுவோர் சிலராகவே இருப்பர் மனிதமேன்மை கருதி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய தொண்டு ஆகும். அத்தகைய புதுமைகாணும் முற்போக்குக் கருத்துகளை மக்களிடம் பரப்பி வந்த வரலாறு அறிய வேண்டும்; அறிந்து புத்துணர்வு பெற வேண்டும் அதை உளங்கொண்டு அவ்வழியில் நடக்க முற்பட வேண்டும். இதுவே வளர்ச்சிக்குரியது: பயன் தருவது.

நம் தமிழகத்தில் 1901ஆம் ஆண்டுமுதல் பல சீர்த்திருத்தக் கருத்துகளை, முன்னேற்றச் சிந்தனைகளை, வாழ்வியல் பாடங்களைக் கூறிப் பாப்பிய வரலாறு மிக விரிந்ததாகும்; சிறந்ததாகும்.