பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வெள்ளையாம்பட்டு சுந்தரம்

7

இங்கே பதச்சோறாக நினைவூட்ட பதின்மூன்று பேர்களின் 15 சொற்பொழிவுகளை ஒரு புத்தக அளவில் தரப்படுகிறது. 1901 முதல் 1971 வரை அறிஞர் பெருமக்கள், பொதுமக்கள் முன் பெருஞ்சபைகளில் சொற்பொழிவு செய்துள்ளவற்றில் குறிப்பிடத்தக்க பதின்மூன்று அறிஞர்களின் சொற்பொழிவுக் கருத்துகளை ஒரு சேரப் படிக்கும் வாய்ப்பு இந்நூலால் கிடைக்கிறது. பதினைந்து நிகழ்வுகளின் கருத்துத் தொகுப்பு. இந்நூலால் மறைந்த பலரை மனத்தில் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு எனவும் கொள்ளலாம். புதிய இளைஞருலகம் பழமையான வரலாற்றை அறிய உதவும் நூல் இது.

'திராவிடன்' எனும் நீதிக்கட்சியின் ஏட்டில் பல சமயங்களில் வெளிப்பட்டவற்றை மிகக் கருத்தோடு சேர்த்து வைத்திருக்கும் சமூகப் பொறுப்புக்குரியவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள். எழுபதாண்டுகளில் தேடிச் சேர்த்திருந்தவை இன்றைக்கும் பயன்படத் தக்கது என்பதால் அதனை நூலக்கி வெளிப்படுத்த விரும்பினார். அதை என்னிடம் தந்தார்; வெளியிடுங்கள் என்றார். மறைந்தும் வரலாற்றில் மறையாத மாபெரும் மனிதர்களின் சிந்தனைகளை மக்கட் சமுதாயம் மீண்டும் பெற்றுப் பயன்கொள்ளவேண்டும் என்பதே கவிஞரது பேரவா.

கடந்த நூற்றாண்டில் (1901-1971) புகழோடு வாழ்ந்த சாதனையாளர்களின் சொற்பொழிவுகளைப் படிக்கும்போது பலவித உணர்வுகளைக் கொள்கிறோம். அக்காலச் சமுதாய மக்கள் நிலையையும் தெரிந்துகொள்கிறோம். அன்றைய அறிஞர்களின் மொழிநடையையும் புரிந்துகொள்கிறோம். இவை மட்டுமா? ஆற்றாமையும் மனத்துன்பமும் கூட வந்து சேர்கின்றன.

ஒரு நூறாண்டு காலமாக மாறாமலே ஒரே நிலைமையில் இருக்கின்ற மந்தமான மக்கள் நிலையும் சமுதாயப் போக்கும் மனத்தில் துன்பத்தைத் தருகின்றன. 1901இல் மதுரையில் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு என்பவர் நமது தமிழ் மொழியின் வளர்ச்சியற்ற தேக்கநிலையைப் பற்றி மனம் துடித்துப் பேசியுள்ளார். நூறாண்டுகளுக்குப் பின்னரும் அதே நிலையில் தமிழர் வாழ்கின்ற சூழ்நிலையைப் பார்க்கின்றோம். இப்படியொரு நாடா? இப்படியும் மக்கள் இருக்க முடியுமா? வேறெங்காவது இத்தகைய பிற்போக்கான - முடமான சமுதாயம் இருக்கிறதா என்றெல்லாம் எண்ணங்கள் பின்னலிட்டு நம்மைச் சோர்வடையச் செய்கின்றன.