பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்வேன். சிறிது காலம் நானும் ஆர்க்கிட் மோகம் பெற்றிருந்தேன். அமெரிக்காவிலிருந்து எனக்காகச் சில புதிய இனங்கள் கொண்டு வருவதாக அவர் கூறியிருந்தார்."

"அவர் அமெரிக்கா போயிருந்தாரா?"

"அவருடைய ஆய்வுக்கட்டுரை ஒன்று அயல் நாட்டுத் தாவர இயல் பத்திரிகை ஒன்றில் வெளியாயிற்று. அதனால் அவர் பிரபலமானார். தாவர இயலாளர் மாநாட்டுக்கு அவரை அழைத்தார்கள். இது நடந்தது 1951 அல்லது 52ல், அதன்பிறகு இன்று தான் நான் அவரை சந்திக்க நேர்ந்தது."

"இத்தனை வருடம் அவர் என்ன செய்தார்?"

"எனக்குத் தெரியாது. நாளைக்குத் தெரியும் என்று நம்புகிறேன்."

"அவர் பைத்தியம் இல்லையே?"

பார்க்கப்போனால் உன்னைவிட அதிகப் பைத்தியம் இல்லை. நீயும் உன் நாய்களும், அவரையும் அவரது செடிகளையும் விட உயர்ந்தவையில்லை."

நாங்கள் அபிஜித்தின் காரில் பாராசாத் நிலையம் நோக்கி ஜெஸ் ஸோர் சாலையில் சென்றோம். நாங்கள் என்பதில், அபிஜித்தையும் என்னையும் தவிர, மூன்றாவது ஒரு ஜீவன், அபிஜித்தின் நாய் பாதுஷாவும், சேரும். இது என் தவறுதான். குறிப்பாகத் தடுக்கப்படாவிட்டால், அபிஜித் தனது நாய்களில் ஒன்றைக் கட்டாயம் கொண்டு வருவான் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும்.

பாதுஷா கபில நிற ராம்பூர் வேட்டைநாய், பெரியது. வலியது. காரின் பின் இருக்கை முழுவதையும் அடைத்துக் கொண்டது. அதன் முகம் சன்னலுக்கு வெளியே நீண்டிருந்தது. விரிந்து பரந்த பசும் வயல்களை அது ரசித்ததாகவே தோன்றியது. அவ்வப்போது, சாலையில் தென்பட்ட ஊர் நாய்களைப் பார்த்து அது வெறுப்புடன் குரைத்தது.

பாதுஷாவின் வருகை இந்தப் பயணத்துக்கு தேவையற்றது என நான் கூறவும், அபிஜித் மறுத்துரைத்தான்: "உனது துப்பாக்கி சுடும் திறமையில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் இவனை நான் கூட்டி வருகிறேன். நீ பல வருடங்களாகத் துப்பாக்கியைத் தொடவேயில்லை. ஆபத்து ஏற்பட்டால் பாதுஷா அதிகம் உதவுவான். அவன் மோப்பசக்தி அசாதாரணமானது. அவன் எப்படிப்பட்ட வீரன் என்பது உனக்கே தெரியும்."

காந்தி பாபு வீட்டைக் கண்டு கொள்வதில் சிரமம் எதுவுமில்லை. பிற்பகல் இரண்டரை மணி அளவில் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். வெளிவாசலைக் கடந்ததும் சீரான பாதை ஒன்று அவர் பங்களாவுக்கு

18