பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறந்து போனாள். பாட்டி, ஒரு பெண் அறிய வேண்டிய அனைத்தையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தாள். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஆகவே சீதாவுக்கும் படிக்கவோ எழுதவோ தெரியாது.

ஆற்றுக்கு அப்பால் ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஆனால் சீதா அதைப் பார்த்ததேயில்லை. தீவில் அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன.

தாத்தா தனது வலையைச் சீர்படுத்திக்கொண்டிருந்த போது, சீதா குடிசைக்குள் இருந்தாள். பாட்டியின் நெற்றியைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். பாட்டியின் உடல் சுரத்தால் கொதித்தது. மூன்று நாட்களாகவே பாட்டிக்கு நோய்; எதுவும் சாப்பிட முடியவில்லை. முன்பும் அவள் சீக்காக இருந்திருக்கிறாள்; ஆனால் இவ்வளவு மோசமாக இல்லை. பாட்டி தூங்கியதும் சீதா மெதுவாக அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நின்றாள்.

மழைக்கால மேகங்களால் வானம் இருண்டிருந்தது. இரவு முழுவதும் மழை பெய்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் மழைபெய்யும். அந்த வருடம் பருவ மழை சீக்கிரமாகவே, ஜூன் இறுதியிலேயே, வந்துவிட்டது. இப்போது ஜூலை கடைசி. ஏற்கெனவே ஆறு பொங்கிப் புரண்டது. அது பாய்ந்து வரும் ஓசை மிக நெருங்கியும், வழக்கத்தைவிட மிக அச்சம் தருவதாகவும் இருந்தது.

சீதா தாத்தா அருகில் சென்றாள். அரசமரத்தின் கீழே அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

"உனக்குப் பசிக்கிற போது சொல். ரொட்டி சுட்டுத் தருவேன்" என்றான் அவன்.

"உன் பாட்டி தூங்கிவிட்டாளா?"

"அவள் தூங்குகிறாள். ஆனால் சீக்கிரம் விழித்து விடுவாள். அவளுக்கு நோவு அதிகம்."

கிழவர் ஆற்றுக்கும் அப்பால், காட்டின் இருண்ட பசுமையையும், சாம்பல் நிற வானத்தையும், உற்று நோக்கினார். "நாளைக்கு அவள் குணம் அடையாவிட்டால், ஷாகன்ஞ் நகர ஆஸ்பத்திரிக்கு அவளை இட்டுப் போவேன். அவளை எப்படிக் குணப்படுத்துவது என்பது அங்கு இருப்பவர்களுக்குத் தெரியும். நீ சில தினங்கள் தனியாக இருக்க வேண்டும்."

சீதா சிரத்தையாகத் தலையாட்டினாள். பாட்டி குணம் அடைய வேண்டும். ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருக்கையிலும் சிறு படகை வலித்துச் செல்லும் சக்தி தாத்தாவுக்கு இருந்தது. இதை அவள் அறிவாள். வீட்டில் உள்ள தங்கள் சிறிது உடைமைகளைக் கண்காணிக்க யாராவது ஒருவர் அங்கு இருந்தாக வேண்டும்.

32