பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குளிர்நீர் தொட்டதை அவள் கவனிக்கவேயில்லை. பெட்டியைப் பூட்டி, சாவியைப் பாறைச் சுவரில் உயரே இருந்த ஒரு பொந்தில் வைத்தாள். அதன் பிறகு தான் அவள் நீர் பரவிய தரையில் நடந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

கண்டகாட்சி அச்சுறுத்தவும், அவள் அசைவற்று நின்றாள். தண்ணிர் கதவு விளிம்பு வழியாகக் கசிந்து அறைக்குள் புகுந்து கொண்டிருந்தது.

சீதா மற்ற அனைத்தையும் மறந்தாள். குடிசையைவிட்டு வெளியே பாய்ந்தாள். முழங்கால் அளவு நீரில் விரைந்து, அரச மரத்தின் பாதுகாப்பை நாடி ஒடினாள். தரையின் நன்கறிந்த சின்னமாக அந்த மரம் மட்டும் அங்கே இல்லையென்றால், அவள் ஆழமான தண்ணீரில், ஆற்றுக்குள், தவறி விழுந்திருப்பாள்.

மரத்தின் உறுதியான கிளைகளின் மீது அவள் வேகமாக ஏறினாள். பழக்கமான ஒரு கிளைமீது பாதுகாப்பாக அமர்ந்தாள். கண்ணில் விழுந்து மறைத்த சரக்கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.

***

அவசரமாக வந்ததற்காக அவள் சந்தோஷப்பட்டாள். இப்போது குடிசையை நீர் சூழ்ந்து கொண்டது. தீவின் மேட்டுப் பகுதிகள் மட்டுமே சில பாறைகள், குடிசை கட்டப்பட்டிருந்த பெரிய பாறை, சில செடிகள் முளைத்திருந்த சிறு குன்று ஒன்று-பார்வையில் பட்டன.

கோழிகள் குடிசையை விட்டு வெளியே வரவில்லை. அநேகமாக அவை படுக்கைச் சட்டத்தின் மேலே ஏறியிருக்கும்.

அசாதாரணப் பொருள்கள் நீரில் மிதந்து சென்றன-அலுமினிய கெட்டில், பிரம்பு நாற்காலி, பல்பொடி டப்பா, காலியான சிகரெட் பெட்டி, மரக் காலணி, பிளாஸ்டிக் பொம்மை...

தண்ணிர் மேலும் உயர்ந்திருந்தது. தீவு வேகமாக மறைந்து கொண்டிருந்தது.

ஏதோ ஒன்று குடிசைக்குள்ளிருந்து மிதந்து வெளிப்பட்டது.

அது ஒரு காலி மண்எண்ணெய்டப்பா. கோழி ஒன்று அதன் மேலே நின்றது. டப்பா தண்ணிரில் ஆடிஅசைந்தபடி, மரத்துக்குப் பக்கத்திலேயே வந்தது; நீரோட்டத்தில் சிக்கி, ஆற்றோடு இழுத்துச் செல்லப்பட்டது. கோழி இன்னும் அதில் தொத்தி நின்றது.

சற்று நேரத்துக்குப் பிறகு தண்ணிர் படுக்கையைத் தொட்டிருக்க வேண்டும். ஏனெனில் மீதமிருந்த கோழிகள் பாறை அடுக்கிற்குப் பறந்தன. அங்கிருந்த சிறு ஒதுக்கிடத்தில் ஒண்டின.

சீதா மேலும் சிறிது உயரே போனாள். கன்னங்கரிய காட்டுக் காகம் ஒன்று மேற்கிளைகளில் தங்கியிருந்தது. அங்கு காக்கைக் கூடு இருந்ததை

36