பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணங்கள் அவள் ஆற்றை மறந்திருந்தாள்-மாம்பழத்தில் பூரணமாக லயித்துவிட்டாள்.

படகு மிதந்து சென்றது. ஆனால் முன்போல் வேகமாக அல்ல. மலைப் பக்கமிருந்து தள்ளிப்போகப் போக, ஆறு தனது சக்தியையும் சீற்றத்தையும் அதிகம் இழந்துவிட்டது.

"என் பெயர் கிருஷ்ணன்" என்றான் பையன். "என் அப்பா நிறைய பசுக்களும் எருமைகளும் வைத்திருக்கிறார். ஆனால் பல வெள்ளத்தோடு போய்விட்டன."

"நீ பள்ளிக்கூடம் போகிறாயா?" என்று சீதா கேட்டாள்.

ஆமாம். நான் பள்ளிக்கூடம் போவது உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் ஒன்று இருக்கிறது. நீ பள்ளிக்குப் போக வேண்டுமா?"

"இல்லை-எனக்கு வீட்டில் வேலை மிக அதிகம்."

அவள் வீட்டுக்கு ஆசைப்பட்டுப் பயனில்லை-இனி அங்கே வீடு எதுவும் இராது!

"மரங்கள் நிற்கும் இடத்துக்குப் போக முயல்வோம். நாம் இரவுப் பொழுதில் ஆற்றிலே இருக்கமுடியாது." என்றான் அவன்.

எனவே மரங்களை நோக்கிப் படகை தள்ளினான். பத்து நிமிடங்கள் சிரமப்பட்ட பிறகு, ஆற்றின் ஒரு வளைவை அடைந்தான். ஆற்றின் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் தப்புவது சாத்தியமாயிற்று.

விரைவில் அவர்கள் ஒரு காட்டில் இருந்தார்கள். நெடிய பசும் மரங்களுக்கிடையே படகு சென்றது.

கிருஷ்ணன் சொன்னான்: "நாம் படகை இங்கு ஒரு மரத்தில் கட்டி வைப்போம். அப்புறம் ஒய்வெடுக்கலாம். நாளை நாம் காட்டை விட்டு வெளியேற வழி காண்போம்."

அவன் படகின் அடியிலிருந்து நீளக் கயிறு ஒன்றை எடுத்தான். அதன் ஒரு நுனியைப் படகின் பின்பக்கம் கட்டினான். மறுமுனையைத் தண்ணிருக்குச் சிறிதளவே உயர்ந்து தொங்கிய கனமான கிளை ஒன்றின் மேல் வீசி முடிந்தான். படகு அடிமரத்தை ஒட்டி அமைதியாக நின்றது.

இரவில் வனவிலங்குகள் வெளிப்பட்டு நகர்ந்தன. பொந்துகள், குகைகள், வளைகளிலிருந்து வெள்ளத்தால் துரத்தப்பட்ட பிராணிகள் பாதுகாப்பையும் வறண்ட தரையையும் தேடித் திரிந்தன.

ஒரு பெரிய மலைப்பாம்பு நீரில் நீந்தித் தங்களை நோக்கி வருவதை சீதாவும் கிருஷ்ணனும் கண்டார்கள். அது படகினுள் வரக்கூடும் என்று சீதா பயந்தாள். ஆனால் அது அவர்களைகக் கடந்து சென்றது. தலை நீருக்கு மேலிருக்க, அதன் பெரிய நீண்ட பகுதி பின்னே இழுபட நீந்திய அது கரும் நிழல்களிடையே மறைந்தது.

42