பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவன் பயம் நியாயமானதே. அவன் வீட்டிலிருந்து புறப்படுகையில் அவன் அம்மா எச்சரித்து அனுப்பினாள். "புது ஆடைகள் வேண்டும் என்று அடம்பிடித்தாய் அவற்றைக் கிழித்தாலோ, அழுக்கு ஆக்கினாலோ உனக்குச் சரியானபடி உதை கொடுப்பேன்" என்றாள்.

அம்ரித் தன் பெற்றோரைப் பாடாய்ப்படுத்தினான் என்பது உண்மை தான். ஐசப் ஒரு புதுச்சட்டை வாங்குகிறான் எனக் கேள்விப்பட்டதும், ஐசப் சட்டை மாதிரியே தனக்கும் ஒன்று வேண்டும், தராவிட்டால் பள்ளிக்கூடம் போகமுடியாது என்று முரண்டு பிடித்தான். அவன் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். "மகனே, ஐசப் பண்ணையில் வேலை செய்ய வேண்டும். அவன் உடுப்புகள் கிழிந்துள்ளன. உனக்கு எல்லாம் புதுசு மாதிரி நன்றாக இருக்கின்றன" என்றாள்.

அம்ரித் தன் சட்டையிலிருந்த ஒரு கிழிசலை விரலை விட்டுப் பெரிதாக்கியபடி, "யார் அப்படிச் சொன்னது?" என்று கத்தினான்.

அம்மா வேறொரு தந்திரத்தைக் கையாண்டாள். "ஐசபுக்கு புதுச் சட்டை வாங்கித் தருவதற்கு முந்தி அவன் அப்பா அவனை நன்றாக உதைத்தார். உனக்கும் அறை கொடுக்கவா?" என்றாள்.

அம்ரித் பின்வாங்கவில்லை. "சரி. என்னை கட்டிப் போடு. அடிகொடு. ஆனால் ஐசப் சட்டை மாதிரி எனக்கும் ஒன்று வாங்கியாக வேண்டும்" என்று அவன் திடமாக அறிவித்தான்.

"சரி, போய் உன் அப்பாவிடம் கேள்" என அம்மா தட்டிக் கழித்தாள்.

அம்மா இல்லை என்று சொல்லிவிட்டால், அப்பாவும் சம்மதிக்க மாட்டார் என அம்ரித் அறிவான். ஆனால் அவன் விட்டுவிடக் கூடியவன் அல்ல. அவன் பள்ளி செல்ல மறுத்தான், சாப்பிட மறுத்தான், இரவில் வீட்டுக்கு வரவும் மறுத்தான். முடிவில், அம்மா மனம் மாறினாள். அவனுக்குப் புதிய ஆடைகள் வாங்கும்படி அப்பாவைக் கட்டாயப்படுத்தினாள். அம்ரித் ஒளிந்து கொண்டிருந்த ஐசப் வீட்டு மாட்டுத் தொழுவத்திலிருந்து அவனை அழைத்து வந்தாள்.

அழகாக ஆடை அணிந்து வீட்டிலிருந்து கிளம்பிய அம்ரித் தனது உடுப்புகளைப் பாழ்பண்ணக் கூடிய எதையும் செய்ய விரும்பவில்லை. முக்கியமாக, ஐசபுடன் சண்டையிட அவனுக்கு மனமில்லை.

அவ்வேளையில், கும்பலின் போக்கிரிப் பையன்களில் ஒருவன் அம்ரித்தின் கழுத்தைத் தன் கையால் வளைத்துக் கொண்டு,"வா, நாம் குஸ்தி போடலாம்" என்றான். அம்ரித்தைத் திறந்த வெளிக்கு இழுத்து வந்தான்.

அவன் பிடியிலிருந்து நழுவ அம்ரித் முயன்றான். "பார் காலியா, நான் குஸ்தியிட விரும்பவில்லை. என்னை விட்டுவிடு" என்றான்.

48