பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காலியா அவனை விட்டுவிட மறுத்தான். அம்ரித்தைப் பிடித்துத் தரையில் தள்ளினான். இதர பையன்கள் மகிழ்வோடு கூவினார்கள். அம்ரித் தோத்துப் போனான். காலியா வென்றான்! காலியாவுக்கு வெற்றி! ஜே! ஜே!"

ஐசப் ஆத்திரம் அடைந்தான். அவன் காலியாவின் கையைப் பற்றி, "வா, உன்னோடு நான் சண்டை போடுவேன்" என்றான்.

காலியா தயங்கினான். ஆனால் மற்றப் பையன்கள் அவனைத் தூண்டினார்கள். இரண்டு பேரும் கட்டிப்பிடித்துப் போராடினர். ஐசப் காலியாவின் காலை இடறி, அவனை மண்ணில் குப்புற வீழ்த்தினான். காலியா சத்தமிட்டு அழுதான்.

விளையாட்டாகத் தொடங்கியது வினையாக முடிந்தது என்பதைப் பையன்கள் உணர்ந்தார்கள். காலியாவின் தந்தை அடிக்க வருவார் என்று பயந்து, அவர்கள் நாலாபுறமும் சிதறி ஒடினார்கள்.

அம்ரித்தும் ஐசபும் அந்த இடத்தை விட்டு அகன்றனர். சில அடிதூரம் நடந்ததும், அம்ரித்தின் பார்வை ஐசபின் சட்டை மீது படிந்தது. அதன் பையுடன் வேறு இடத்திலும் நீளமாய் கிழிந்திருந்தது. அவர்கள் மேலே செல்லாமல் அங்கேயே நின்றனர். பயத்தால் அரண்டு போனார்கள். சட்டையின் கிழிசல்களை ஆராய்ந்தார்கள். ஐசயின் அப்பா வீட்டிலிருந்து, "ஐசப் எங்கே?" என்று கூச்சலிடுவது வேறு அவர்களுக்கு கேட்டது.

இருவர் நெஞ்சங்களும் பயத்தால் துடித்தன. தங்களுக்கு சரியானபடி கிடைக்கும் என அவர்கள் அறிவர். ஐசபின் அப்பா சட்டை கிழிந் திருப்பதைக் கண்டதுமே, அவன் தோலை உரித்துவிடுவார். வட்டிக் காரனிடம் அவர் கடன் வாங்கி, நிறைய நேரம் செலவுசெய்து நல்ல துணியாகத் தேர்ந்து, சட்டை தைத்திருந்தார்.

மறுபடியும் ஐசயின் தந்தை கத்தினார்: "யார் அழுவது? ஐசப் எங்கே?"

சட்டென அம்ரித்துக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் ஐசபை ஒரு பக்கமாக இட்டுச் சென்றான். "என்னோடு வா. ஒரு விஷயம்" என்றான். இரண்டு வீடுகளுக்கும் இடையிலிருந்த சந்தில் நுழைந்ததும், அம்ரித் தனது சட்டையை கழற்றலானான். உம், நீ உன் சட்டையை கழற்று. என் சட்டையைப் போட்டுக் கொள்" என்று கூறினான்.

"உன் விஷயம் என்ன? நீ எதை அணிவாய்?" என்று ஐசப் கேட்டான்.

"நான் உன் சட்டையை அணிவேன் என்று பதிலளித்தான் அம்ரித். "சீக்கிரம். யாரும் நம்மைப் பார்ப்பதற்குள் அணிந்து கொள்."

ஐசப் தன் சட்டையைக் கழற்றத் தொடங்கினான். ஆனால் அம்ரித்தின் திட்டத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை அவனால். "சட்டைகளை மாற்றிக்கொண்டால் அப்பா உன்னை அடிப்பாரே."

49