பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல திட்டம் இல்லை தான். பின்னர் அவன் பாணேஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். மனிதர்கள் தொல்லையில் சிக்கி விழிப்பதை நந்து ரசித்தான். ஆனால் இது எல்லை மீறிவிட்டது.

"அட கடவுளே, அவன் பறந்து போய்விட்டான்"

"அவனைக் கீழே இழுங்கள் கீழே இழுங்கள்!"

"கயிற்றைப் பிடி போலீஸ் போலீஸ் தீ அணைப்புப் படையை கூப்பிடு!"

அங்கு ஏகக் குழப்பம். ஒவ்வொருவரும் பயந்து போய், அடுத்தவருக்கு உத்திரவிட்டு, உபதேசம் பண்ணி, அலைபாய்ந்தனர்.

ஒர்லி கடல்புறம் வழியே ஒடிக்கொண்டிருந்த கார்கள், திடீரென்று போக்குவரத்து விளக்குகள் சிவப்பாய் மாறியதைக் கண்டவை போல், வரிசையாக நின்றுவிட்டன. நூறு கோயில்களில் சங்குகள் முழங்குவது போல் கார் ஊதுகுழல்கள் சத்தமிட்டன.

அதிவேக பினேயைச் சுமந்த பலூன் உயரே உயரே எழும்பிச் சென்றது. மேல்காற்று ஒன்று அதன் நேர்உயரப் பயணத்தை மேற்கு நோக்கி அடித்துச் சென்றது.

எந்தப் பையனின் ரத்தத்தையும் உறையவைக்கக் கூடிய பயங்கரம் அது. அதிவேக பினே எத்தனையோ பயங்கர நெருக்கடிகளை அனுபவித்திருக்கிறான். ஆனால் இதைப் போல் என்றுமே நிகழவில்லை. நீலவானின் வெறும் வெளியில் அவனை எடுத்துச் செல்கிறதே இது.

ஒரு சமயம் யுத்தமுனை ஒன்றில் அவன் பாரசூட் மூலம் கீழே இறங்கியது உண்டு. ஆனால் அது அவன் சுயநினைவோடு செய்தது, அன்னை பூமியை நோக்கி அவன் கீழிறங்குவான் என்ற நிச்சய நினைப்புடன் செய்தது. இப்போது அவனுக்கு அவ்வித நிச்சயம் எதுவுமில்லை. பலூன் அவனை எங்கே எடுத்துச் செல்கிறது-எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் போகும்-அது அவனை எங்கே நழுவவிடும் என்பதெல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்.

அதிவேக பினேயின் உடம்பில் வேர்த்துக் கொட்டியது. அவன் கீழே பார்த்தபோது, தலை சுற்றியது. அவன் பயந்துவிட்டான். அவன் கார்ட்டுன் படத்தில் வரும் அதிமனிதன் இல்லை. பயந்து நடுங்கும் சின்னஞ் சிறுவன் தான்.

தன் கைகள் மரத்துப்போகத் தொடங்குவதை அவன் உணர்ந்தான். ஒரு கை கயிற்றைப் பற்றியிருந்தது. மறு கை பித்தளை வளையத்தில் சிக்கியிருந்தது. பிடியை விடக்கூடாது, விட்டால் நாசம் தான் என அவன் அறிவான்! தரை மீது விழுந்தால், அவன் சட்னி ஆகிப்போவான். "கடவுளே! என்னைக் காப்பாற்று!" என்று கத்தினான்.

88