பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

91

பிறருக்குக் கேடு செய்ய முனையும் முன், அவனால் விளையக்கட்டிய துன்பத்தை நீயே முதலில் எண்ணிப்பார்.

என்னதான் குறிபார்த்து விட்டாலும் அம்புகள் குறித்த இடத்திற்குப் பாயும் என்ற உறுதி இல்லை. மரத்தை வெட்டுபவன் வீசிடும் கோடாறி அவன் காலிலேகூட அது படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீ அமைதியை விரும்புவது போலவே எல்லோரும் விரும்புகின்றனர். பழி தீர்க்க நினைப்பதே தீமையை வரவழைத்துக் கொள்வதாகும். அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவது இடரானது.

எதிரியைத் தாக்க நினைப்பவன் தனக்குத் தானே தீங்கு தேடிக் கொள்பவன் ஆவான். பகைவனின் ஒரு கண்ணைக் குருடாக்க நினைப்பவன், தன் இரண்டு கண்களும் இல்லாத குருடனாகி விடுவான்.

நினைத்தபடி நடக்காதபோது வருந்துகிறோம். திட்டமிட்டபடி பழி தீர்த்துக் கொண்டால், அந்த வெற்றியே துயருக்குத் தொடக்கம். சட்டத்திற்கு அஞ்சி அமைதியை இழந்து அவனும் அழிந்து போகிறான்.

எதிரியின் உயிரைப் பறிப்பதால் உனக்கு என்ன பயன்? வெறுப்பு உன்னை விட்டு அகன்று விடுமா? உனக்கு நிறைவுதான் உண்டாகுமா?