பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு

12


தார், வற்புறுத்தினார், நான் மறுத்தேன் என்று பத்தினிப்பல்லவி பாடுகிறாயே; உண்மையைச் சொல்லுகிறாயா, வேலையாட்களைக் கூவி அழைத்து, உன்னைப் பிடித்துக் கொண்டு போய்த் தக்க தண்டனை தரச் சொல்லட்டுமா? இரண்டே நிமிஷம்! இதற்குள் தீர்மானித்துவிடு.”

“அந்தக் காமக்குரங்குக்கு ஏற்றவளாகத்தான் வந்து சேர்ந்திருக்கிறாய். என் பேச்சை நம்பாவிட்டால் எனக்கொன்றும் நஷ்டம் இல்லை. பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருப்போம் வா என்று வற்புறுத்தி அழைத்தான், உன் கணவன், காமவெறி பிடித்த கிழம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என்னை இம்சிக்கத் தீர்மானித்தான். தடுத்துப் பார்த்தேன், தலைவலி என்றேன், தகாது என்றேன், கிழவன் விட மறுத்தான்; வேறு வழி இல்லை, ஓடிவந்தேன் அவனை ஏய்த்துவிட்டு, இது உண்மை!”

“உண்மையா? உன்னைத்தான் கேட்கிறேன். நீ ஏன் அவருடைய இஷ்டத்திற்கு மறுத்தாய்? யார் நம்புவார்கள் இந்தப் பேச்சை? அவர் மிட்டாதாரர், நீ ஒரு விலைமகள். அப்படியிருக்க அவருடைய இஷ்டத்திற்கு நீ மறுக்க வேண்டிய காரணம் என்ன?”

“அந்தக் கிழட்டுக் காமுகனிடம் யாருக்கம்மா இஷ்டம் பிறக்கும்? உன்னைப் போல வேண்டுமானால் அந்தக் கிழவரை கல்யாணம் செய்துகொள்ளச் சில பெண்கள் சம்மதிப்பார்கள். அது வேறு விஷயம். பிரேமைக்குப் பாத்திரமாக முடியுமா அந்தக் கிழவன்?”