பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சிறுகதைகள்


போல இப்படி விளையாடுகிறோமே” என்று மரகதவல்லி கேட்டுவிட்டுச் சிரித்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் மஹா மாயக்காரி! எப்படியோ மயக்கிவிட்டாள். கன்னத்தை கிள்ளுகிறாள், கூந்தலைக் கோதுகிறாள், புருவத்தைத் தடவுகிறாள், அணைத்துக் கொள்கிறாள், முத்தம் கூடத் தருகிறாள்! அடா! அடா! இவள் சின்னக்குழந்தையிலிருந்தே மகா குறும்பு போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள் மதுரவல்லி. எவ்வளவு கோபம் முதலிலே இருந்ததோ அதைவிட அதிக அளவு சிநேகம் உண்டாகிவிட்டது, அவ்வளவு விரைவிலே. பக்கத்திலே அந்தப் பாவை உட்கார்ந்திருப்பதும், விளையாடுவதும், பேசுவதும், மதுரவல்லிக்கு ஏதோ ஓர் காந்த சக்தி போலிருந்தது.

“என் பெயர் என்ன என்று கேட்கவில்லை, நானும், சொல்லவில்லை. என் பெயர் ஆயிரம் உண்டு. எதைச் சொல்ல உனக்கு” என்று கேட்டாள் அந்த ஆடலழகி.

“போடி குறும்புக்காரி! பெயரைச் சொல்லடி என்றாள் விகடம் பேசுகிறாள். உன் பெயர் என்னடி” என்று கொஞ்சும் குரலிலே கேட்டாள் மிட்டாதாரரின் மனைவி.

“நான் உண்மையைச் சொன்னாலே உனக்கு ஏனோ நம்பிக்கை பிறக்கவில்லை. அடி, பைத்தியமே! நிஜமாகவே சொல்கிறேன், எனக்கு ஒரு பெயர், இரண்டு பெயர் அல்ல, பல பெயரிட்டு என்னை அழைப்பார்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயர் எனக்கு” என்றாள் ஆடலழகி.