பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சிறுகதைகள்

“சொல்லடி கள்ளி! தலை ஒன்றும் போய்விடாது சொல்லு.”

“அவ்வளவு தைரியம், வந்துவிட்டதா உனக்கு? பேஷ்! மிட்டாதாரரின் மனைவி என்ற தைரியம். ஆனால் பாவம், பதறிவிடுவாய் நான் உன் மீது குற்றம் சுமத்தினால்.”

“சுமத்து பார்ப்போம். பதறவும் மாட்டேன், கதறவும் மாட்டேன். நான் என்ன குழந்தையா?”

“குழந்தை மட்டுமா நீ! பைத்தியக்காரக் குழந்தை! பக்குவமறியாத பெண்! பயனில்லாத வாழ்க்கை! பரிமளமில்லாத புஷ்பத்தைப் போன்று இருக்கும் உன் வாழ்வு! நீ விஷயமுணர்ந்தவளாக இருந்தால், கிழவனுக்கு வாழ்க்கைப் படச் சம்மதிப்பாயா?”

“என்னடி பெயரைக் கேட்டால், பழிசுமத்துவேன் என்று கூறினாய். என்னடி பழிசுமத்த முடியும் என்று கேட்டால், கிழவன் குமரன் என்று பேசுகிறாய். பேச்சை மாற்றி என்னை ஏமாற்றுகிறாய். உன் பெயர்தான் என்ன சொல்லடி.”

“எத்தனை தடவை சொல்வது, எனக்கு ஒரு பெயர் இரண்டு பெயரல்ல, பல உண்டு. என்னைச் சாவித்திரி என்று கூப்பிடலாம், அனுசூயா என்று அழைக்கலாம், வசந்தசேனா என்று சொல்லலாம். சீதா, அல்லி, பவளக்கொடி, ருக்மணி என்று கூப்பிடலாம். இன்று மலர்க்கொடி, நாளைக்கு என்ன பெயர் கிடைக்குமோ தெரியாது!”