பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு

19


“இந்தப் பெயரெல்லாம் உனக்குப் பொருந்தாது. வாயாடி என்று பெயர் வைத்துக்கொள், அதுதான் பொருத்தம்.”

இந்தப் பேச்சுக்குப் பிறகு இரண்டு அணங்குகளும், படுத்துத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். முதலிலே தூங்கிய மாது மதுரவல்லிதான். மலர்க்கொடிக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு தூங்கும்போது கூட அழகுடன் காணப்பட்ட மதுரவல்லியைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்.

பொழுது விடியுமுன், மலர்க்கொடி, தூங்கிக் கொண்டிருந்த மதுரவல்லியை எழுப்பி விடை பெற்றுக்கொண்டு தனது ஜாகைக்குப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான், மதுரவல்லிக்கு மிட்டாதாரரின் காமச் சேட்டை பற்றிய கவனமும், கோபமும் வந்தன. “அந்தக் கிழம்! காமக்குரங்கு சேட்டைகள் செய்தான்! ஆடவந்தேன் அலங்கோலப் படுத்த நினைத்தான்!” என்று மலர்க்கொடி கூறிய வாசகங்கள் மதுரவல்லி முன்பு உருவெடுத்து நின்று கூத்தாடுவதுபோலத் தோன்றின. “யோக்கியதையற்றவன். விழாவுக்காக ஆட வந்தவளை, அவனுடைய இஷ்டத்திற்கு மாறாக இம்சிப்பதா? அவள் தற்செயலாக என்னிடம் ஓடிவந்து முறையிட்டாள். வேறு யாரிடமாவது சொன்னால், இவருடைய யோக்கியதையைப் பற்றி ஊர் சிரிக்காதா? சேச்சே! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்னிடம் வருவாரல்லவா, இளித்துக்கொண்டு பேச, அப்போது பேசிக்கொள்கிறேன்” என்றெல்லாம் நினைத்து வருந்தினாள்.