பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சிறுகதைகள்


என்ன ருஜு வேண்டும். நான் வாழ்ந்த வாழ்வு என்ன! எனக்கு இப்போது வந்திருக்கும் இடி என்ன! அட ராமச்சந்திரா!” என்று ஆயாசப்பட்டார்.

“கோபப்படாமல் கேட்கவேண்டும் ஒரு விஷயம். கடிதமோ நம்மிடம் இருக்கு. இந்தக் கழுதைகளை விரட்டி விடுவோம். விஷயம் எதுவும் வெளிவர மார்க்கமில்லை. வீணாக மனக்கிலேசம் அடையத் தேவையில்லை” என்று வேதாந்தாச்சாரியார் கூறினார். மிட்டாதாரரின் பெருமூச்சு, அது பயனில்லாத யோசனை என்பதை அறிவித்தது.

“நீ இரு இங்கே. இதோ நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கடிதத்துடன் ஓடினார் மிட்டாதாரர் மதுரவல்லியின் அறைக்கு. கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. தடதடவெனத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. தன் எதிரிலே, மிகக் கோபத்துடன் மிட்டாதாரர் நிற்கக் கண்டாள் மதுரவல்லி. அவரைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபம் கரையைப் பிளந்துகொண்டு வரும் வெள்ளம் போலாகிவிட்டது. மீண்டும் கதவை மூட முயற்சித்தாள். மிட்டாதாரர், முரட்டுத்தனமாகத் தடுத்து “கள்ளி! உன் வேலையை இங்கே காட்டாதே!” என்று மிரட்டினார்.

“நீர் ஒரு மிட்டாதாரர், மிரட்ட தெரியும் உமக்கு. நான் ஒரு மிராசுதாரர் மகள், எனக்கு இந்த மிரட்டல் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சி. என்னிடம் காட்டவேண்டாம் உமது வீராவேசத்தை” என்று உறுதி கலந்த குரலிலே, தீப்பொறி பறக்கப் பேசினாள் மதுரவல்லி.