பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சிறுகதைகள்


என்னை ஆட்களை விட்டு, அடிக்கச் சொல்வார்கள். மதுரவல்லி! என் வாழ்க்கையே விசித்திரமானதுதான்! இரவு நான் இராணி! பகலிலே, ஏழை! இரவு வேளைகளிலே மாளிகை, உப்பரிகை, தாதிகள், மண்டியிடும் மன்னர்கள்! பொழுது விடிந்ததும், பழையபடி உழைப்பாளி! இந்த விசித்திரத்தை எல்லாம்விட, நேற்று எனக்கு இன்ப இரவு. இனி எனக்கு வரப்போகிறது, இடி மேல் இடி. ஒரு வேளை மரணமே வந்தாலும் வரக்கூடும் மதுரவல்லி! நான் வேண்டுமென்றே உன்னை ஏமாற்றினேன் என்று மட்டும் எண்ணாதே. என்னை மன்னித்துவிடு. நான் நிரபராதி!” என்று உருக்கமாகக் கூறினான் சீதாபதி.

“நீயா நிரபராதி” என்று கேட்டாள் மதுரவல்லி, கோபத்துடன் அல்ல, புன்சிரிப்புடன், புதுப்பார்வையுடன்.

விஷய விளக்கம் பெற்ற மிராசுதாரர், வண்டி அருகே வந்தார். “இறங்கு கீழே” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலிலே கூறினார், சீதாபதியை நோக்கி. மதுரவல்லியைப் பார்த்து, “அம்மா! மலர்க்கொடி இங்கே இருக்கட்டும் நான் விஷயத்தைப் பிறகு சொல்கிறேன்” என்று மகளிடம் சொன்னார். மதுரவல்லி, “எனக்கே விஷயம் தெரியும், இப்போதுதான்! ஆனால் அப்பா! இவளை இங்கே நிறுத்திவிட வேண்டாம், கொன்று விடுவார்கள்” என்று கூறினாள்.

மலர்க்கொடியை, மிராசுதாரர் தன் வண்டியிலே ஏற்றிக் கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. முன்னால் நாலு காவலாளிகள் தீவர்த்தி சகிதம் கிளம்பினர். அவை