பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு

35


போகும் திக்கு நோக்கியபடி திகைத்து நின்றார் மிட்டாதார்.

மதுர மனோரஞ்சி சபையின் பிரதம நடிகராகச் சீதாபதி புகழ்பெற்றார். “தெரியுமோ விஷயம்! சீதாபதிக்கு, வரப்பிரசாதம், மதுரவல்லித் தாயார் கடாட்சத்தால் கிடைத்தது” என்று ஊரிலே, பலர் வம்பு பேசினர். அதாவது சீதாபதி என்ற நடிகனுக்கும் மிராசுதாரர் மகள் மதுரவல்லிக்கும் தொடர்பு என்று வம்பளப்பு! அதனுடைய உண்மை யாருக்குத் தெரியுமோ! மதுரவல்லி மட்டும், கடைசிவரை மிட்டாதாரர் மாளிகைக்குப் போக மறுத்துவிட்டாள்! மதுர மனோரஞ்சித சபை நாடகங்களுக்குப் போவதற்கும் தவறுவதில்லை!! அந்தக் கம்பெனியார், “காமக் குரங்கு” என்ற நாடகத்தை எந்த ஊரிலே நடத்தும்போதும், மதுரவல்லியைக் காணலாம். அந்த நாடகத்தை நடத்தாமலிருக்கச் செய்ய மாகாளிப்பட்டி மிட்டாதாரர் எவ்வளவோ முயன்றார், முடியவில்லை என்றும் ஊரிலே வதந்தி. ஆனால் அந்த நாடகம்தான் அக்கம்பெனியின் முதல்தர நாடகம், வைர விழா நாடகம்! அவ்வளவு ஆதரவு அதற்கு!