பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லாதது


வளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு. பள்ளியில் பல நாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்திலே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால், அப்படிப்பட்ட மாணவியை, முட்டாள், தடிக்கழுதை, உதைக்கிறேன் பார், என்று எவ்வளவோ வசைமொழி சொல்லலாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒரு நாளாவது, சொல்ல வேண்டுமென்று எண்ணியதை சொன்னதேயில்லை. புன்சிரிப்புடன் தலையை அசைப்பார், சுந்தரியின் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டுப்படும், அது ஒரு புதுவிதமான களையைத் தரும். அதை ரசிப்பார் ஆசிரியர். வேறு மாணவியின் காதை இழுப்பார், கன்னத்தைக் கிள்ளுவார், தலையைக் குட்டுவார், சுந்தரி மீது சுடுசொல் வீசமாட்டார், அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து.

“குட்டி பெரியவளானால் மகா ரூபவதியாக இருப்பாள். கண்களே போதும் ஆளை மயக்க, அந்தப் புன்-