பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லாதது

37


சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதேயில்லை. சுருண்டு கருத்து அடர்ந்து, காற்றிலே அலையும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே, அடடா என்ன நேர்த்தி, இலாவண்யம்” என்று, சுந்தரியின் பாலப்பருவ ரசிகர்கள் சொல்லவில்லையே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர்களே கிடையாது.

“சுந்தரி, நாமோ ஏழைகள், விதவிதமான துணிகள் உனக்குக் கிடையாது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக் கொண்டு தானே இரண்டு ஜீவன்கள் வாழ வேண்டும்! உன் தகப்பனோ, எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு ஊறுகாய் தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல்லாம்” என்று சுந்தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கியவதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே, அந்த பச்சை மேல்சொக்காயும், பாக்குக் கலர் பாவாடையும், அவளுடைய சிவந்த மேனிக்கு அழகாகத்தான் இருந்தது. பம்பாய் நகர சீமை வாயிலும் அவளுக்கு எதற்கு? அழுமூஞ்சி அலமு, பொட்டைக் கண் பொன்னி, வழுக்கைத் தலை வனிதா, அவர்களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள் என்று தனபாக்கியம் சொல்லவில்லை. ஆப்பம் சுட்டு விற்பவளுக்கு பணக்காரவீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா?

சுந்தரியின் வளர்ச்சியும், வீட்டிலே வறுமையின் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவளுடைய அழகு வளர்ந்தபடி இருந்தது, எதையும் சட்டை செய்யாமல்.