பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுகதைகள்


தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.

மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான்