பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சிறுகதைகள்


ணாதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் வீட்டிலே தள்ளிவிடுவார்கள் என்றும் கருதாதே. பார் எப்படியாவது எங்கள் வீட்டாரைச் சரிபடுத்திக் கொண்டு உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்!”

“என்னையாவது நீங்கள் கலியாணம் செய்து கொள்வதாவது, அறுபது வேலிக்குச் சொந்தக்காரர் உங்கள் அப்பா, நான் ஆப்பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதாவது. அதெல்லாம் நடவாத காரியம். ஏன் வீணாக என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!”

“சுந்தரி, சத்தியம் செய்கிறேன். என்னை நம்பு.”

“சத்தியமா? ஆசைக்குக் கண்மண் தெரியாது. அதனாலே பேசுகிறீர்கள் இதுபோல வீணாக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை,”

“எங்கள் விட்டிலே மண்டை உடையக் கூடிய சண்டை நடப்பதானாலும் சரி உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்து விட்டேன்.”

“மனக்கோட்டை இது, இடிந்துபோகும். இலுப்பப்பட்டி மிராசுதார் மகள் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல இருக்குதாம்! இருந்தால் என்ன, அவள்தான் உனக்கு நாயகியாக வரப்போகிறவள்….”

“சீ ! அந்தக் குரங்கையா, நான் கலியாணம் செய்து கொள்வேன்?”

இவை சுந்தரிக்கு கனகு சொல்லாதவை. கனகுக்குச் சுந்தரியும் சொன்னதல்ல!

சிலகாலத்துக்குப் பிறகு இலுப்பப்பட்டி மிராசுதாருக்குத் தான் கனகு மருமகனானான்.