பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லாதது

43


சொல்லியிருப்பாள்? அவன் சொன்னதுதான் இவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க.

“அம்மா, வாயைக் குமட்டுகிறது. சாதம் பிடிக்கவில்லை. மயக்கமாக இருக்கிறது. என்னமோ போல இருக்கிறது உடம்பு” என்று சுந்தரி சொல்லாமலேயே, தனபாக்கியம் நிலைமையைக் கண்டுகொண்டாள். “ஐயையோ, மோசம் வந்து விட்டதே, அந்தப் பயல் அநியாயமாக ஏதுமறியா என் மகளைக் கெடுத்து விட்டான் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளை நல்ல இடத்திலே யாரும் கேட்கவில்லை. இப்படியும் நேரிட்டு விட்டால் என் கதி என்னாவது? அடி பாழும் பெண்ணே, இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினாயே! அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத்துப் போனாயா!” என்றெல்லாம் சொல்லித் தனபாக்கியம் சுந்தரியைக் கண்டிக்கவில்லை. விஷயம் வெளிவந்து விட்டால் விபரீதமாகிவிடுமே என்ற பயத்தால். ஆனால் தனபாக்கியத்தின் பெருமூச்சும், தானாக வழிந்த கண்ணீரும் சுந்தரிக்கு இதைவிட விளக்கமாகத் தாயின் மனோவேதனையைத் தெரிவித்தது.

“தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிறாய். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் இறுமாப்பினால் கஷ்டமடைந்தவர்களை யெல்லாம் உன் கருணையால் காப்பாற்றுகிறாய். இவ்வளவு நல்லவனான உன்னால் என் குடும்பமே பாழாகிவிட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப் பாவி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே,