பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சிறுகதைகள்


வளருகிறதே உன்னால் ஏற்பட்ட வம்பு. ஊரார் தூற்றுகிறார்களே, சுந்தரியின் கண்ணீர் என்னைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ , அப்பனுக்குப் பயந்தோ ஒருவளைக் கலியாணம் செய்துகொண்டாய், உன் அன்பு மொழியை நம்பினாள் இந்த அபலை. இவளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா இரண்டாந்தாரமாக? இழிவு போகுமே”. என்று தனபாக்கியம் கனகனிடம் கூறவில்லை, கூறிப் பார்ப்போம் என்று பல தடவை எண்ணுவாள். எப்படிக் கூறுவது சொல்லிப்பயன் என்ன என்று எண்ணி, ஏங்குவாள்.

“அம்மா கன்னி கருவுற்றால், ஊர் தூற்றும் என்று பயந்து ஓடிவிட்டோ ம், நீ காப்பாற்று” என்று சொல்ல மனம் இடந்தரவில்லை, தனபாக்கியத்துக்கு. ஊரை விட்டு தொலைந்தால் போதும், என்று சுந்தரியை அழைத்துக் கொண்டு வேறு ஊர் வந்து குடி ஏறினாள். சுந்தரிக்குப் பத்தாம் மாதம்! மருத்துவம் பார்க்க வந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்தரங்கக் கதையைக் கூறவில்லை. “அவளுடைய புருஷன் அக்கரைக்கு ஓடிவிட்டான்” என்று பொய்யுரைத்தாள். தாலி இருந்தது சுந்தரியின் கழுத்திலே தாய் மகளுக்குக் கட்டிய தாலி!!

தங்க விக்ரஹம் போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு. பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோவிலிலே பலமான பூஜை நடத்திக் கொண்டிருந்தார் லோகு முதலி.

கலியாணமோ இல்லை, குழந்தையோ தவழ்ந்தது அந்தக் குடிசையிலே! மாளிகையிலே, கனகனும், காவேரி-