பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லாதது

47


சீமானின் மருமகனாகிச் சிங்காரமாக வாழ நினைத்த கனகு, சீரழிந்த மிராசு குடும்பத்தைக் காப்பாற்றித் தீர வேண்டிய பொறுப்பைத் தான் பெற்றான். குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதை போல!

தேசாந்திரி திருவேங்கிடத்துக்குத் தன் குடும்பத்தின் நிலையை யாரும் கூறவில்லை. யாருக்கு என்ன அக்கரை! அவன் ஒரு நாள் அன்போடு, உபசரித்தான் ஒரு ஆண்டியை! அந்த ஆண்டி மாறுவேடத்திலே வந்திருந்த இலட்சாதிகாரி என்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்குக் கிடைத்த சோறு வேறொருவனின் பசியைத் தீர்க்க உதவட்டும் என்ற பெரிய தத்துவத்தையும் அவன் யாரிடமும் பாடங்கேட்டவனல்ல. அன்று அவனுக்குப் போதை! சோறு இருந்தது நிரம்ப, பசி இல்லை. பாதையிலே சுருண்டுக் கிடந்தான் ஒரு பரதேசி; தூக்கி எடுத்து வைத்துக்கொண்டு உபசரித்தான் திருவேங்கடம்.

பரதேசிக் கோலத்திலே பல ஊர் சுற்றித் தர்மவான்களின் தப்புலித்தனம், புண்ணியவான்கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக் கண்டு அனுபவ அறிவு பெற்று வந்த அருமைநாயகம் பிள்ளை, பல இலட்சத்தைப் பாங்கியிலே வைத்திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது கண்ட அருமைநாயகம், அந்த ஆண்டிக்கே தன் சொத்து முழுவதையும் தந்துவிடுவது என்று தீர்மானித்து விட்டான். அதைச் சொன்னால் அவன் நம்ப மாட்டான் என்பதற்காகத் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. தன்னுடன் வரும்படி கூறினான். ‘வீடு நமக்கு நாடு முழுவதுமே; ஓடு உண்டு