பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சிறுகதைகள்


கையில்’ என்ற விருத்தத்தைப் பாடியபடி சம்மதித்தான் திருவேங்கடம். இருவரும் பல ஊர் அலைந்துவிட்டு அருமைநாயகத்தின் ஊராகிய ஆற்றூர் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றூரிலே, தன் குடும்பம் இருப்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. யாருக்குத் தெரியும்! ஆற்றூரிலே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கையில், தனபாக்கியத்தைத் திருவேங்கடம் கண்டான். ஆச்சரியமடைந்தான், குடிசை சென்றான், சுந்தரியைக் கண்டான். தங்கராஜனைக் கண்டான். தகதகவென ஆடினான். சந்தோஷத்தால், மெல்ல மெல்ல விஷயத்தைத் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித்தது.

“எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக்கிறேன்.”

“வேண்டாம் அவன் பெரிய பணக்காரன். உலகம் அவன் பக்கம் பேசும்.”

“துறவிக்கு வேந்தன் துரும்பு. தெரியுமா? அவன் மனிதனாடி? இந்தச் சொர்ணவிக்கிரகத்தை அவன் கண்டானா? அவன் பணக்காரனானால் எனக்கென்ன பயமா? சீ! நான் எத்தனையோ பணக்காரன் பரதேசிப்பயலாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன் – இதோ இதே ஊரிலே இருக்கிறாரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்கு தெரியும். பணமாம் பணம். அது என்னடி செய்யும்?”

திருவேங்கடம் தம் மனைவியிடம் இதுபோலச் சொல்லிக் கொண்டு இல்லை. மனதிலே எண்ணினான் பல. சொல்ல வாய் வரவில்லை.