பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லாதது

49


திருவேங்கடத்தின் குடும்பத்தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிர்க்கதியாகி நிந்தனைக்குட்பட்டுக் கிடந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் சக்தி தனக்கு இருந்ததற்காகச் சந்தோஷமடைந்தார். குடிசை காலியாகிவிட்டது. தங்கராஜன் பெரிய தாத்தா மடியில் கொஞ்ச நேரமும் சின்னத் தாத்தா தோளில் கொஞ்ச நேரமும் இருப்பான். கூத்தாடுவான், கூவுவான் – கண்டு களிப்பாள் சுந்தரி. மறுகணம் அவள் கண்களிலே நீர் பெருகும். ஏழ்மையிலே மூழ்கியிருந்த சமயத்திலாவது, சதா ஜீவனத்துக்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டியிருந்ததால் விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமைநாயகத்தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம் இல்லாமற் போகவே, சுந்தரிக்கு விசாரம் விடாத நோயாகிவிட்டது.

இலுப்பப்பட்டியார் இறந்தார். கனகனின் தகப்பனார் அவரைத் தொடர்ந்தார். காவேரி காசநோய்க்கு பலியானாள். கணவன் கப்பலேறினான். பர்மாவுக்குக் கடைக் கணக்கப் பிள்ளையாக! அக்கரையிலிருக்கிறான் சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகிவிட்டது!

தங்கராஜனுக்கு வயது பத்தாகி விட்டது. அவனுக்குச் சொல்லவில்லை, தாயாரின் துயரத்தை. ‘தகப்பன் அக்கரையிலே ஏன் இருக்கிறார். எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?’ என்று அவன் கேட்கவில்லை. என்ன காரணத்தினாலோ, மனைவியிடம் சண்டையிட்டுவிட்டு, அவர் போய்விட்டார் என்று நம்பியிருந்தான்.

கணவன் வேலைக்கு அமர்ந்திருந்த கடையின் முதலாளி கொடுமைக்காரன். அவன் தந்த இடி பொறுக்கமாட்டா

7