பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சிறுகதை


முடியாதபடி, ஒரு ஆனந்த அணைப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும் ஒரு சிறுவனும் அங்கே இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இருவர் விழிகளிலும் நீர் குபுகுபுவெனக் கிளம்பி வழிந்தது.

“சுந்தரி! சுந்தரி! கண்ணே சுந்தரி” என்று கதறினான் கனகு. முகத்தைத் தன் இரு கரங்களிலும் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்தான், அவள் கன்னத்திலே புரண்டோ டிய கண்ணீரைத் துடைத்தான். மீண்டும் அணைத்துக் கொள்ளச் சென்றான்; கழுத்திலே தாலி இருக்கக் கண்டான் பயந்தான். சுந்தரிக்கு முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது.

“தங்கம், சின்னத் தாத்தாவை அழைத்து வா” என்று கூறினாள். சிறுவன் ஓடினான். அவனைப் பின் தொடர்ந்து சென்றார் அருமைநாயகம். அரைமணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக்கூடாது” என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரிதத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம். கணவன் தன் கதையைக் கூறினான். அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட்டான்.

“அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்து விட்டார்” என்று ஆற்றூர் வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல்லவில்லை. தாய் கட்டிய தாலி. “அக்கரைக்கு போன அவள் புருஷன் வந்துவிட்டான். இனி இக்கரையிலே தான் இருப்பானாம்” என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். அவன் கட்டாத தாலி இவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய