பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்ப்பளியுங்கள்!

57


முள் தைத்தவர் அலறுவது போன்ற குரலிலே, “தெரிந்தவனானால் என்ன, தெரியாவிட்டால் என்ன? நீதியின் கண்களுக்குச் சிநேகிதன், பந்து, இவைகள் உண்டா? பைத்தியக்காரா! எனக்கு எப்போதும் அம்மாதிரி எண்ணம் வருவதே கிடையாது. யாருக்கும் வரக்கூடாது. நீதியின் சக்கரம் சாமான்யமானதல்ல” என்று கூறினார். இதேது, இன்று இரவு நெடு நேரம் வரையிலே இவருடைய உபதேசத்தைக் கேட்கவேண்டும் போலிருக்கிறதே” என்று நான் சற்று பயந்தேன்.

“மகாலிங்கம், கள்ளன், அயோக்கியன், குடியன். இவற்றிற்கு ருஜு இருக்கிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொள்பவர் போலப் பேசினார் என் நண்பர்.

“சரி! ருஜு இருக்கும்போது, கள்ளனை, அயோக்கியனைத் தண்டிக்க வேண்டியதுதானே. இதிலே தயவு தாட்சணியம் என்னமோ இல்லை, கூடாது. இன்னம் யோசனை ஏன்?” என்று நான் மாஜிஸ்ட்ரேட்டானேன். மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளையோ ஒரு விசித்திர வக்கீலானார்.

“மகாலிங்கம், கள்ளன் அயோக்யன், குடியன் என்பதற்கு எப்படி ஆதாரம் இருக்கிறதோ அதே போலவே அவன் சாது, யோக்யன், ஏமாந்தவன் என்ப தற்கும் ருஜு இருக்கிறது” என்றார்.

உண்மையிலேயே இது சிக்கலான பிரச்னைதான். என் நண்பர் கவலைப்படுவதற்குக் காரணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன்.

“வேடிக்கையாக இருக்கிறதே சொல்வது! யோக்யன், அயோக்யன் என்று ஒரே ஆளை எப்படிக் கூறுவது?

6