பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சிறுகதைகள்


அமாவாசை பௌர்ணமி தினத்தில் எனக் கூறுவது போல் இருக்கிறதே!” என்று நான் உவமையை உதவிக்கு இழுத்தேன். மருதவாணர் அதிலும் சளைக்கவில்லை. “பச்சை ஓணான், அடிக்கடி நிறம்மாறும் தெரியுமா?” என்று கேட்டார். “ஆமாம்!” என்று நான் இழுத்தேன். “என்ன ஆமாம், எதற்கும் ஆமாம்சாமி போடுகிறாய். ஊரைக் கொளுத்துவது தவறுதானே?” என்று வேறோர் கேள்வியைக் கேட்டார். திடுக்கிட்டு, “நிச்சயமாகத் தவறுதான்” என்றேன். “தவறுதான்! ஆனால் இலங்காதகனம் புண்ய காரியமாகப் பாவிக்கப்படவில்லையா?” என்றார் நண்பர். இதேது வம்பு வளர்ந்தபடி இருக்கிறதே என்று அஞ்சி, “அதுவேறு விஷயம்! அரக்கனுடைய ஊரை அனுமார் கொளுத்தினார், அது…......” என்று முடிக்கவே அவசியமில்லாத வாசகத்தை வீசினேன். “அது கடவுள் விஷயம், அது தானே உன் வாதம்” என்று என் நண்பர் என் வாசகத்தை முடித்துவிட்டு, மேலே பேசலானார்: “மகாலிங்கம் யோக்யன்தான், அயோக்கியனுந்தான்! ஏமாற்றினான் என்பதும் உண்மை, ஏமாந்தான் என்பதும் உண்மைதான்!” என்றார்.

“எனக்கு விளங்கவில்லையே! கோர்ட்டிலே வந்த சாட்சிகள், அவன் யோக்யன், சாது, ஏமாந்தவன் என்றா சொன்னார்கள்?” என்று கேட்டேன். “அதுதானே கிடையாது! கோர்ட்டிலே அவ்வித சாட்சியே கிடையாது” என்று கூறிவிட்டு, உள்ளே சென்றார். சில கடிதங்களுடன் வந்து சேர்ந்தார். ஒன்றை எடுத்தார்.

“இதோ பார். இது குலாப்சந்த் சௌகார் சாட்சியம்.”